/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அலட்சியத்தால் அதிகரிக்கும் விபத்துக்கள்
/
அலட்சியத்தால் அதிகரிக்கும் விபத்துக்கள்
ADDED : ஜூலை 24, 2025 08:13 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே தொண்டியாளம் பகுதியில், சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால் விபத்து அதிகரித்து வருகிறது.
பந்தலுார் இருந்து உப்பட்டி, குந்தலாடி வழியாக வயநாடு மற்றும் கூடலுார் தேவர்சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. அதில், தொண்டியாளம் என்ற இடத்தில், சாலையை ஒட்டி நீரோடை பாய்கிறது.
கடந்த ஆண்டு பருவமழையின் போது, நீரோடையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையின் ஒரு பகுதி தாழ்வாக மாறியது. இதனை சீரமைக்க வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
வேகமாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மண் கற்களை கொட்டி தற்காலிக சீரமைப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கற்கள் உடைந்து மண் சரிந்து சேறும் சகதியுமான சாலையாக மாறி உள்ளது.
இரவு நேரங்களில் சாலையின் நிலை குறித்து தெரியாமல், வேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் விபத்தில் சிக்கி விழுவது அடிக்கடி தொடர்கிறது. ஓட்டுனர்கள் கூறுகையில், 'சேதமடைந்த சாலையை முழுமையாக சீரமைக்காமல், பெயரளவிற்கு சீரமைத்ததால் விபத்து அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் விரைவில் இந்த சாலை துண்டிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படும்,' என்றனர்.
எனவே, சாலை முழுமையாக துண்டிக்கப்படும் முன்னர், முழுமையாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.