/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஆல்கஹால்' பரிசோதனையில் சிக்கியவர்கள் மீது... நடவடிக்கை! போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
/
'ஆல்கஹால்' பரிசோதனையில் சிக்கியவர்கள் மீது... நடவடிக்கை! போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
'ஆல்கஹால்' பரிசோதனையில் சிக்கியவர்கள் மீது... நடவடிக்கை! போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
'ஆல்கஹால்' பரிசோதனையில் சிக்கியவர்கள் மீது... நடவடிக்கை! போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க அறிவுரை
ADDED : மார் 12, 2024 01:16 AM
ஊட்டி:'போக்குவரத்து கழகத்தில் நடந்த 'ஆல்கஹால்' பரிசோதனையில் சிக்கி, இதுவரை ஏழு ஊழியர்கள் ஒருவாரம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழகத்தின் கீழ், 'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் மேட்டுப்பாளையத்தில் கிளை - 2,' என, 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 800 போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிபுரிகின்றனர். நாள்தோறும் பல்லாயிரம் பயணிகள் அரசு பஸ்சை பயன்படுத்து கின்றனர்.
இந்நிலையில், போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களில் சிலர் மது பழக்கத்தில் சிக்கி தவிப்பதாக, ஏற்கனவே போக்குவரத்து கழக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதில், 'குடும்ப பிரச்னை; பணியின் போது அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி; வேலை பளு ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம்,' ஆகியவற்றால், இவர்கள் மது பழக்கத்துக்கு ஆளானதாகவும் காரணங்கள் கூறப்படுகிறது.
இதுவரை ஏழு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'
மலை மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் கிராமங்களில் இரவு நிறுத்தப்படுகிறது. அங்கு இரவில் தங்கும் சில ஊழியர்கள், பணி முடிந்து சோர்வுடன் செல்லும் சில ஊழியர்கள் மது அருந்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதை தொடர்ந்து, காலையில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு, ஆல்கஹால் கருவியை கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், பணிக்கு வரும் போது, மது பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டதால், ஒரு வாரம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு திருப்பி அனுப்புகின்றனர். இதற்கான போக்குவரத்து கழகத்தில் சில அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஊழியர்களுக்கு யோகா பயிற்சி தேவை
மனநல மருத்துவர்கள் கூறுகையில்,' நாள்தோறும் பல இடங்களுக்கு அதிகாலை முதல், இரவு வரை பஸ்களை இயக்கும் போது உடல் சோர்வு ஏற்படுவது வழக்கம். அதில், சில டிரைவர்கள் மது பழக்கம், புகை பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் எக்காரணத்தை கொண்டும் மது பழக்கத்துக்கு அடிமையாக கூடாது. இதனால், அவர்களின் குடும்பம்; பயணிகளும் பாதிக்கப்படுவர்.
இத்தகைய ஊழியர்களுக்கு உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனை முகாம், யோக பயிற்சி போன்றவகளை வழங்க, போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
நீலகிரி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜ் கூறுகையில்,'' போக்குவரத்து ஊழியர்கள்; பயணிகள் நலன் கருதி, அனைவருக்கும் ஆல்கஹால் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுவரை, 7 பேர் பரிசோதனையில் சிக்கியதால், ஒரு வாரம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். ஒருவரின் 'லைசன்ஸ்' பத்து ஆண்டுகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் பயண விதிகளை கடைப்பிடிக்க போதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பு கருதி தொடர் கண்காணிப்பு பணி தொடரும்,'' என்றார்.

