/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க நடவடிக்கை! 20 கி.மீ., அகழியை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
/
காட்டு யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க நடவடிக்கை! 20 கி.மீ., அகழியை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
காட்டு யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க நடவடிக்கை! 20 கி.மீ., அகழியை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
காட்டு யானைகள் கிராமங்களில் நுழைவதை தடுக்க நடவடிக்கை! 20 கி.மீ., அகழியை சீரமைக்க ரூ.50 லட்சம் ஒதுக்கீடு
ADDED : நவ 25, 2025 05:22 AM

கூடலுார்; முதுமலை யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க, தொரப்பள்ளி முதல் பாட்டவயல் வரை, 20 கி.மீ., துாரம் சேதமடைந்துள்ள அகழியை சீரமைக்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து இரவு, பகல் நேரங்களில் வெளியேறும் காட்டு யானைகள், எல்லையில் உள்ள, கிராமங்களுக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கிறது.
இதனை தடுக்க, முதுமலை வனத்துறை சார்பில், கூடலுார் அருகே தொரப்பள்ளி முதல், ஸ்ரீமதுரை, போஸ்வரா, தேவர்சோலை, நெலாக்கோட்டை வழியாக பாட்டவயல் வரை, முதுமலை வன எல்லையில், இரு ஆண்டுக்கு முன்பு அகழி அமைக்கப்பட்டது. இதன் மூலம், யானைகள் கூடலுா ருக்குள் நுழைவது தடுக்கப் பட்டது.
மழையால் அகழி சேதம்
இந்நிலையில், அகழியை வனத்துறையினர் தொடர்ந்து பராமரிக்காத காரணத்தால், மழை காலங்களில் பல இடங்களில் அகழி சேதமடைந்தது. சில யானைகள் அகழியை சேதப்படுத்தி குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
வனத்துறையினர் அவ்வப்போது சில குறிப்பிட்ட பகுதியில், அகழியை சீரமைத்தாலும், வன ஊழியர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தாலும், காட்டுயானைகள் ஊருக்குள் நுழைவது தடுக்க முடியவில்லை. இதனால், ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். பல முறை வனத்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து கோரிக்கை வைத்தும், அகழியை சீரமைக்கும் நடவடிக்கை தாமதமானதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இரவில் கிராமங்களுக்கு செல்லும் போதும் பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்ந்தது. பகல் நேரங்களில், மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்லும் போது, யானைகள் உலா வருவதும் தொடர்ந்து.
ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு
இந்நிலையில், தொரப்பள்ளி முதல் -பாட்டவயல் வரை, 20 கி.மீ., துாரம் அமைக்கப்பட்டுள்ள, அகழியை சீரமைக்க வனத்துறை சார்பில், 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'தொரப்பள்ளி பாட்டவயல் வரை சேதமடைந்த அகழி சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கப்படும். இதன் மூலம் முதுமலையிலிருந்து காட்டு யானைகள் கூடலுார் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க முடியும்,' என்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'அகழி சீரமைக்கப்பட்டாலும், முதுமலையில் உள்ள சில யானைகள், அகழியை சேதப்படுத்தி குடியிருப்புக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளன. அப்பகுதிகளை வனத்துறையினர் அடையாளப்படுத்தி, அங்கு சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்,'என்றனர்.

