/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இளைய தலைமுறையினர் இறை வழிபாட்டை கற்க அறிவுரை
/
இளைய தலைமுறையினர் இறை வழிபாட்டை கற்க அறிவுரை
ADDED : பிப் 04, 2025 11:30 PM

பந்தலுார்; 'இளைய தலைமுறையினர் இறை வழிபாட்டை கற்க ஆர்வம் கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே எருமாடு வெட்டுவாடி பகுதியில், பழமை வாய்ந்த சிவன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழா குழு ஒருங்கிணைப்பாளர் சசீதரன் வரவேற்றார். கமிட்டி தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். சம்பூஜ்சிய ஓங்காரநந்தா தீர்த்த சுவாமிகள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து, மதுரை மாவட்ட வடகுரு மடாதிபதி சுவாமி குச்சனுார் கிழார் ஆன்மிகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், ''இந்துக்களின் இறை வழிபாட்டில், ஒவ்வொரு வழிபாட்டு முறைக்கும் அர்த்தங்கள் உள்ளன. விபூதி வைப்பது, ருத்ராட்சம் அணிவது மற்றும் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் இருந்தாலும், இவை அனைத்தும் இறைவன் ஒருவரே என்பதை உணர்த்துவதாகவே உள்ளது.
தனி மனிதர்கள் இறைவனாக முடியாது. இறைவன் நிலம், நீர், காற்று என அனைத்திலும் வியாபித்து இருக்கும் நிலையில், பழங்கால வழிபாட்டு முறைகளை இளைய தலைமுறைக்கு, கற்றுத்தர இந்து சமய பெரியவர்கள் முன் வரவேண்டும். இளையோரும் இதில் ஆர்வம் கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை பாதுகாக்கப்படும்,'' என்றார்.
தொடர்ந்து, 'கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சமூக பணி,' என, பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் குருசாமி, தந்திரி, மேல்சாந்தி, சிற்பி, ஸ்தபதி, மகளிர் குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கோவில் தர்மகர்த்தா தங்கவேல், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் கேசவன், சேரங்கோடு ஊராட்சி முன்னாள் துணை தலைவர் சந்திரபோஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமிகுட்டி, உட்பட பலர் பங்கேற்றனர். இணைச் செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.