ADDED : ஆக 20, 2026 07:52 PM
பாலக்காடு: பாலக்காடு அருகே, போலீஸ் ஸ்டேஷனில் இளைஞரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முண்டூர் சத்ரம்காவு சேர்ந்த சசிகுமார் மற்றும் அவரது மகன் டினு ஆகியோரை, இரு தரப்பினர் இடையிலான நில எல்லை பிரச்னைக்காக, கடந்த, 19ம் தேதி கோங்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீசார் வரவழைத்தனர். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதோடு தாக்கியுள்ளனர். இதை அடுத்து டினு மண்ணார்க்காடு டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
டினு கூறுகையில், ‘‘என்னை சுவரோடு சாய்த்து நிறுத்தி கையை பிடித்து முறுக்கியதில், கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சீருடை அணியாமல் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மிரட்டல் விடுத்து, பயமுறுத்தும் வகையில் பேசினார். இடப்பிரச்னைக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
