கலப்பு மலைகாய்கறி விவசாயத்தில் சிறு விவசாயிகள் அசத்தல்! மழைகாலத்தில் மண் வளத்தை பாதுகாப்பத்தில் களம்
கலப்பு மலைகாய்கறி விவசாயத்தில் சிறு விவசாயிகள் அசத்தல்! மழைகாலத்தில் மண் வளத்தை பாதுகாப்பத்தில் களம்
UPDATED : ஜூலை 13, 2026 05:42 PM
ADDED : ஜூலை 13, 2026 05:41 PM

ஊட்டி: 'நீலகிரி மாவட்டத்தில், கலப்பு மலை காய்கறி விவசாயத்தில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால், பயிர் பாதுகாப்பு குறித்து உரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க தோட்ட கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், 'நீர் போகம், கார் போகம், கடை போகம்' என, ஆண்டுக்கு மூன்று பருவங்களாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் அந்தந்த பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் ஊட்டி, மேட்டுப்பாளையம் சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தரம் பிரிக்கப்பட்டு, தமிழகம் உட்பட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊட்டி அருகே, கொல்லிமலை ஓரநள்ளி, தாம்பட்டி, எம்.பாலாடா, கூக்கல்தொரை, கேத்தி பாலாடா, ஆடாசோலை, தேனாடுகம்பை பகுதிகளில், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் ஆகியவற்றுடன், புரோக்கோலி, லெட்யூஸ் மற்றும் ரெட் எல்லோ கேப்சிகம் போன்ற வெளிநாட்டு காய்கறிகளும் கலப்பு முறையில் தொடர்ந்து பயிரிடப்படுகின்றன. கலப்பு முறை ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் பல வகையான காய்கறிகளைப் பயிரிடுவதன் வாயிலாக பூச்சிகளை கட்டுப்படுத்தி, மண் வளத்தை பாதுகாக்கவும் முடிகிறது.
ஆய்வு அவசியம்: விவசாயிகள் கூறுகையில், 'நீலகிரியில் சமீபகாலமாக மாறுபட்ட கால நிலை நிலவுவதால், பருவ மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்வதில்லை. சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் அடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையினர் அந்தந்த வட்டங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்
தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் விவசாயிகள் மத்தியில் அவ்வப்போது விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். கடந்த இரண்டு பருவங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
