/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊசிமலை கோபுரத்தில் செயற்கை நுண்ணறிவு கேமரா; நாடுகாணி கண்காணிப்பு மையத்தில் சோதனை பணி துவக்கம்
/
ஊசிமலை கோபுரத்தில் செயற்கை நுண்ணறிவு கேமரா; நாடுகாணி கண்காணிப்பு மையத்தில் சோதனை பணி துவக்கம்
ஊசிமலை கோபுரத்தில் செயற்கை நுண்ணறிவு கேமரா; நாடுகாணி கண்காணிப்பு மையத்தில் சோதனை பணி துவக்கம்
ஊசிமலை கோபுரத்தில் செயற்கை நுண்ணறிவு கேமரா; நாடுகாணி கண்காணிப்பு மையத்தில் சோதனை பணி துவக்கம்
ADDED : அக் 08, 2025 10:05 PM

கூடலுார்; கூடலுார் பகுதியில், 6 கோடி ரூபாய் செலவில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து தடுக்கும் திட்டப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில்,சோதனை முறையில் செயற்கை நுண்ணறிவு கேமராக்களின் செயல்பாடு நடந்து வருகிறது.
கூடலுாரில் காட்டு யானைகள் இரவு நேரங்களில், ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. யானைகள் தாக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, வனத்துறை, 6 கோடி ரூபாய் செலவில், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உதவியுடன், காட்டு யானைகளை கண்காணித்து ஊருக்குள் நுழையாமல் தடுக்கும் திட்டத்தை மேற் கொண்டுள்ளது.
இதற்காக, கரியன்சோலை ஊசிமலையில் 'வயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ்' சென்டர்; நாடுகாணி ஜீன்பூல் தாவரம் மையத்தில் கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறை; 35 இடங்களில் சோலார் மின்வேலியுடன் கூடிய முன்னெச்சரிக்கை கோபுரங்கள்; 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்துவதற்காக கோபுரங்கள் அமைத்துள்ளனர். பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது, கோபுரங்கள் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தி, சோதனை பணிகளை வனத்துறையினர் துவங்கி உள்ளனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில்,''கூடலுார் பகுதியில் வனவிலங்கு -மனித மோதலை தடுக்க, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் உதவியுடன் காட்டு யானை, புலி, சிறுத்தை உட்பட பிற விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வரும் போது, கண்காணித்து தடுக்கும் நவீன திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. முற்கட்டமாக, சோதனை முறையில் செயற்கை நுண்ணறிவு கேமரா செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகி றோம்.
இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க கூடியவை. 2 கி.மீ., தூரம் வரை, வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை கண்காணித்து, அலாரம் அடித்து மக்களை உஷார்ப்படுத்தும். மேலும், ஊசிமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் ரிப்பீட்டர்ஸ் சென்டரில் இருந்து. நாடுகாணி ஜீன்பூல் தாவரம் மையத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு வீடியோவுடன் தகவல் அனுப்பும். அதன் அடிப்படையில் களப்பணியில் பணியில் உள்ள வன ஊழியர்கள், யானையை ஊருக்குள் நுழையாமல், தடுக்கும்பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் விலங்கு-மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.