/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் குடிபோதையில் அரசு பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு! காலை நேரத்தில் மது விற்பனை நடப்பதால் தொடரும் தகராறு
/
குன்னுாரில் குடிபோதையில் அரசு பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு! காலை நேரத்தில் மது விற்பனை நடப்பதால் தொடரும் தகராறு
குன்னுாரில் குடிபோதையில் அரசு பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு! காலை நேரத்தில் மது விற்பனை நடப்பதால் தொடரும் தகராறு
குன்னுாரில் குடிபோதையில் அரசு பஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு! காலை நேரத்தில் மது விற்பனை நடப்பதால் தொடரும் தகராறு
ADDED : ஜன 14, 2025 11:36 PM

குன்னுார்: 'குன்னுாரில் குடிபோதையில் வரும் நபர்களால், அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் பகுதிகளில், சமீப காலமாக காலை நேரங்களில் மது போதையில் 'குடி'மகன்கள் உலா வந்து தகராறில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகள் பேசுவதாலும், மக்கள் சங்கடங்களுக்கு ஆளாகின்றனர்.
குடிபோதையில் பஸ்களில் ஏறும் நபர்கள் கண்டக்டர் மற்றும் டிரைவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது.
மூன்று பேர் கைது
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, குன்னுாரில் இருந்து பக்காசூரன் மலை சென்ற அரசு பஸ்சில், படிக்கெட்டில் நின்று குடிபோதையில் பயணம் செய்த, நான்சச் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் கிருஷ்ணகுமார், 30, சரத், 23, ஆகியோர் கண்டக்டர் ராஜேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களை சமாதான செய்ய அங்கு வந்த டிரைவர் பழனியாண்டியை, 55, என்பவரை தாக்கினர். காயமடைந்த டிரைவர் குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது தொடர்பான புகாரின் பேரில், கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து, தொழிலாளர்கள் இருவரையும் கைது செய்தனர். 'நேற்று முன்தினம் சோகத்தொரையில் இருந்து குன்னுாருக்கு குறுகலான சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பஸ் வழி கொடுக்கவில்லை,' என, கூறி, பைக்கில் வந்த ஒருவர் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளார்.
அவர் குன்னுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
வெலிங்டன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் இருந்த பழத்தோட்டம் பகுதியை சேர்ந்த, கோவை மருத்துவமனை, தற்காலிக பணியாளரான சிவக்குமார்,51, என்பவரை கைது செய்தனர்.
மேலும், சோல்ராக் அரசு பஸ்சிலும், பஸ் ஊழியர்கள் மீது இதேபோன்று தாக்குதல் நடந்துள்ளது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
கடந்த, 7 ம் தேதி பஸ் ஸ்டாண்டில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக கத்தி குத்து சம்பவம் நடந்தது. அதில், தங்கராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மறைமுக மது விற்பனை
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'சமீப காலமாக காலை நேரங்களிலேயே பல இடங்களிலும், விதிகளை மீறி 'சில்லிங்' மது விற்பனை நடந்து வருகிறது.
கிராமப்புறங்கள்; அருவங்காடு உட்பட டாஸ்மாக் கடைகள் உள்ள இடங்களில், சிலர் மறைமுகமாக, மது வகைகளை வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரிந்தும், அதற்கு தீர்வு காண யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், அடிக்கடி தகராறு நடக்கிறது,' என்றனர்.
மூன்றாண்டு முடிந்தும் மூடப்படாத கடைகள்
சமூக நல ஆர்வலர் சேகர் கூறுகையில், ''தேர்தல் வாக்குறுதியாக, டாஸ்மாக் மது கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் தீர்வு காணப்படவில்லை.
குறிப்பாக, பள்ளிகள், தந்தி மாரியம்மன் கோவில், மசூதி, உட்பட முக்கிய அலுவலகங்கள் இயங்கும் இடத்தில் உள்ள மது கடைகளை அகற்றக்கோரி பலமுறை கலெக்டருக்கு மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. அருவங்காடு தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மது கடையும் அகற்றவில்லை.
இதுவரை தீர்வு காணப்படாமல் இருப்பதால் நாள்தோறும் மது போதை தகராறுகள் அதிகரித்து வருகிறது,'' என்றார்.