/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நீரோடை பகுதி: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயக்கம்
/
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நீரோடை பகுதி: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயக்கம்
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நீரோடை பகுதி: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயக்கம்
திறந்தவெளி 'பார்' ஆக மாறிய நீரோடை பகுதி: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தயக்கம்
ADDED : நவ 11, 2025 10:09 PM

குன்னுார்: குன்னுார் கேத்தி பாலாடா நீரோடை பகுதியில், மது அருந்துவோர், திறந்தவெளியை 'பார்' போல மாற்றி, தடை செய்யப்பட்ட டம்ளர் மற்றும் ஜூஸ் பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னுார்,கேத்தி பாலாடா பகுதியில் காட்டேரி அணையுள்ளது. இந்த அணையில் இருந்து, நுாற்றாண்டு காலமாக அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் எடுக்கப்படுகிறது. தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொட்டபெட்டா மலை அடிவார நீராதார பகுதியில் இருந்து வரும் நீர், கேத்தி பாலாடா வழியாக காட்டேரி அணையை அடைகிறது. இந்த பகுதிகளை சுற்றியும் மலை காய்கறி தோட்டங்கள் உள்ளன. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, இந்த நீரோடையை துார்வார வேண்டுமென இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு தீர்வு காணாத நிலையில், இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு வரும், 'குடி'மகன்கள் இந்த நீரோடையையொட்டி உள்ள பாதைகளை திறந்தவெளி 'பார்' போல பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வகைகளை வாங்கி வரும் பலர், நீரோடையின் அருகேயுள்ள பாதைகளில் அமர்ந்து மது அருந்துவதுடன், தடை செய்த டம்ளர்கள், ஜூஸ் பாட்டில்கள் போன்றவற்றை நீரோடை, விவசாய நிலங்களில் வீசி விடுகின்றனர். இந்த கழிவுகளால் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது,' என்றனர்.
வருவாய்த் துறையினர் கூறுகையில், ' இப்பகுதியில் ஆய்வு செய்து, போலீசாருடன் இணைந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

