/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனவிலங்கு நடமாட்டம்; தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
/
வனவிலங்கு நடமாட்டம்; தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
வனவிலங்கு நடமாட்டம்; தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
வனவிலங்கு நடமாட்டம்; தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஜன 08, 2025 10:33 PM

பந்தலுார்; பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் வன விலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அத்திக்குன்னா எஸ்டேட் பத்தாம் நம்பர் பகுதியில், தேவாலா வனத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வனவர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
எஸ்டேட் பகுதிகள் வனத்தை ஒட்டி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் இந்த வழியாக வந்து செல்வது வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, பன்றி போன்ற சிறிய வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களிலும் வாழும் தன்மை கொண்டவை.
எஸ்டேட் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்யும் போது, முதலில் ஏதேனும் விலங்குகள் உள்ளதா என்பது குறித்து எஸ்டேட் காவலர்கள் கவனித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் யானை போன்ற வன விலங்குகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் குடிப்பதற்காக, தோட்டங்களை ஒட்டிய பகுதிகளில் வந்து செல்லும்.
இது போன்ற நேரங்களில் தொழிலாளர்கள் அவற்றை பார்த்து ரசிப்பதை தவிர்த்து, உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். எனவே, வனவிலங்குகள் குறித்து அச்சப்படாமல் வேலை செய்வதற்கான நடவடிக்கையை எஸ்டேட் நிர்வாகம் எடுப்பதுடன், வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், வனவர் தமிழன்பன் மற்றும் வனக்குழுவினர், எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.