/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஐயப்பன் கோவில் தேர் பவனி: பக்தர்கள் பரவசம்
/
ஐயப்பன் கோவில் தேர் பவனி: பக்தர்கள் பரவசம்
ADDED : டிச 29, 2025 06:20 AM

குன்னுார்: குன்னுார் ஐயப்பன் கோவிலில் நடந்த மண்டல பூஜை விழாவில், கலாரூபம் ஆட்டத்துடன், செண்டை மேளம் முழங்க ஐயப்பன் பவனி வந்தார்.
குன்னுார் ஐயப்பன் கோவிலில், 59வது ஆண்டு மண்டல பூஜை, 26ல் துவங்கியது. விழாவில், திருவிளக்கு பூஜை, அன்னதானம், படி பூஜை, ராக்கால பூஜை நடந்தது.
முக்கிய திருவிழா நாளான நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், மகா கணபதி ஹோமம் நடந்தது. காலை, 11:00 மணியளவில் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், பால்குட ஊர்வலம் செண்டை மேளம் முழங்க ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது. ஐயப்பனுக்கு பாலபிஷேகம், கலபாபிஷேகம் மற்றும் தேன், பன்னீர், பஷ்மம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.
மாலை, 5:00 மணிக்கு ஐயப்பன் கோவிலில் இருந்து, புஷ்ப அலங்காரத்தில் செண்டை மேளம் முழங்க, திருவீதி உலா புறப்பட்டது. அதில், பாலக்கொம்புடன், புலி வாகனத்தில் ஐயப்பன் பவனி வந்தார். ஸ்ரீ கிருஷ்ணா பிரதீனா குழுவினரின் கலாரூபம் ஆட்டம் இடம் பெற்றது. தாளப் பொலி விளக்குகள் ஏந்தி சிறுமியர், மகளிர் ஊர்வலமாக வந்தனர்.
கோவிலில் துவங்கிய ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், டி.டி.கே., சாலை, வி.பி தெரு, மவுன்ட்ரோடு வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.
அதில், சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு புஷ்ப அலங்காரம் இடம் பெற்றது.
அன்னதானம் வழங்கப்பட்டது. ஜன., 14ல், மகர ஜோதி சிறப்பு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை குன்னுார் ஐயப்ப பக்த சங்கத்தினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.
* முதுமலை மசினகுடி ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் திருவிழா மற்றும் ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மண்டல பூஜை திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு, 108 சங்காபிஷேகம் பூஜை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு தர்மசாஸ்தா சுவாமிக்கு செண்டை மேளத்துடன் உச்சிக்கால பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை செண்டை மேள இசையுடன், பக்தர்கள் தாம்பூல தட்டு ஏந்தி தேர் ஊர்வலம் துவங்கியது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். தேர் ஊர்வலம் மாயாறு, மசினகுடி பஜார் ஊட்டி சாலை வழியாக சென்று நிறைவு பெற்றது.

