UPDATED : அக் 10, 2026 05:41 PM
ADDED : அக் 10, 2026 05:37 PM

பாலக்காடு: பாலக்காடு அருகே, பாலக்குழி அருவியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கிழக்கஞ்சேரி அருகே, பாலக்குழி நீர்மின் உற்பத்தியை, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜு துவக்கி வைத்து பேசியதாவது:
பாலக்காடு மாவட்ட ஊராட்சியின் பராமரிப்பில் உள்ள, 2வது நீர்மின் திட்டம் இதுவாகும். இத்திட்டம், ரூ.15.90 கோடி மதிப்பீட்டில், 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சியின் கீழுள்ள ‘ஸ்மால் ஹைட்ரோ நிறுவனம்’, இதன் பராமரிப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அருவிக்கு மேலே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து, 750 மீ., நீளத்துக்கு, ‘பென்ஸ்டாக்’ குழாய் வழியாக, மலையடிவாரமான கொன்னக்கல் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் கொண்டு வரப்படுகிறது.
தலா, 0.5 மெகாவாட் வீதம் மொத்தம் 1 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, 2 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், மின்வாரியத்தின் வடக்கஞ்சேரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வால்குளம்பு 11 கே.வி., பீடருக்கு அனுப்பப்பட்டு, மாநில மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும், 30.78 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நீர்வரத்தின் அடிப்படையில், வரும் பிப்., மாதம் வரை தடையின்றி மின் உற்பத்தி செய்ய முடியும். முதற்கட்டமாக, தலா, 72 மணி நேரம் வீதம் இரண்டு ஜெனரேட்டர்களும் மாறி மாறி இயக்கப்படும். அதன்பின் இரண்டும் இணைந்தே முழுவீச்சில் இயக்கப்படும். ஒரு யூனிட் மின்சாரத்திற்கு மின்வாரியம் வழங்கும் கொள்முதல் விலை குறித்த பேச்சுவார்த்தை தற்போது நடக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் பினுமோள், கிழக்கஞ்சேரி ஊராட்சி தலைவர் கலாதரன், ‘ஸ்மால் ஹைட்ரோ’ நிறுவன இயக்குநர் ராமகிருஷ்ணன், தலைமை பொறியாளர் பிரசாத் மேத்யூ உட்பட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
