/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பறவைகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்
/
பறவைகள் பல விதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்
ADDED : மார் 16, 2025 11:36 PM

பந்தலுார்; பந்தலுார் சேரம்பாடி வனச்சரகத்தில் ஐந்து இடங்களில் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பலவேறு வகை பறவைகள் பதிவு செய்யப்பட்டன.
மாநிலம் முழுவதும் கடந்த, 9-ம் தேதி வனத்துறை மூலம், நீர் வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, நேற்று நில வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், கூடலுார் வனக்கோட்டத்தில், 23 இடங்களில், 77 வன பணியாளர்கள் மற்றும் 50 தன்னார்வலர்கள் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியில், காலை, 6:30 மணி முதல் ஈடுபட்டனர்.
அதில், சேரம்பாடி வனச்சரகத்தில் ஐந்து இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 'இருவாச்சி பறவை, கிளி, தங்க முதுகு மரங்கொத்தி, ஊதா நிற சூரிய பறவை, சிறிய நீர் காகம், ஆரஞ்சு மினிவெட், சாம்பல் நிற டிராங்கோ, சிலந்தி வேட்டைக்காரன்,' உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பறவைகள், இருப்பது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
வனச்சரகர் அய்யனார் தன்னார்வலர்கள் மத்தியில் கூறுகையில், ''பறவைகள் அதிகளவில் இருந்தால் மட்டுமே அந்த இடம் செழிப்பாக காணப்படும். அதற்கு வனம் மற்றும் நீர் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இதன் மூலமே மனிதர்கள் வாழ தேவையான காற்று மற்றும் நீர் கிடைக்க வழி ஏற்படும். எனவே, கோடை காலங்களில் வனப்பகுதிகளை தீவைத்து அழிக்காமலும், வீடுகளின் அருகே பழங்கள் தரும் மரங்களை நடவு செய்யவும், கோடை காலங்களில் பறவைகளுக்கு வீடுகளை ஒட்டி தண்ணீர் வைக்கவும் மக்கள் முன் வர வேண்டும். இதற்கு, தற்போது கணக்கெடுப்பில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் ஊக்கம் அளிக்க வேண்டும்,'' என்றார்.