/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
ஊட்டியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : அக் 17, 2025 10:56 PM

ஊட்டி: ஊட்டியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வகுப்புகளை விட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இங்குள்ள நட்சத்திர விடுதிகள், அரசு மருத்துவமனை மற்றும் கவர்னர் மாளிகைக்கு கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டியில் ஆங்கிலேயர் காலம் முதல் இயங்கி வரும் பிரபல பள்ளிக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அரசியல் கட்சிகள் குறித்தும், மதரீதியான கருத்துக்கள் மின்னஞ்சல் மிரட்டலில் இடம் பெற்றுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், காவல் துறைக்கு தகவல் தெரிவித்தது. அதன்படி, ஏ.டி.எஸ்.பி., நவீன்குமார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
உடனடியாக, மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் வகுப்பறைகளில் இருந்து, மாணவர்கள் வெளியேற்றினர். மேலும், மாணவர்கள் தங்கும் விடுதி கழிப்பறை மற்றும் சமையல் அறை உட்பட பள்ளி வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை அறிந்து பள்ளி நிர்வாகம் நிம்மதி அடைந்தது.
போலீசார் கூறுகையில், 'மர்ம நபர்களின் இடத்தை சரியாக அடையாளம் காண முடியாத அளவுக்கு 'விபிஎன்' மூலம் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. இருப்பினும், சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன், கூடுதல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மர்ம நபர்களை அடையாளம் காண முயன்று வருகிறோம்,' என்றனர்.