ADDED : ஆக 28, 2026 07:14 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், புது பஸ் ஸ்டாண்ட் முன்பாக, ஆம்புலன்ஸ் டிரைவரான த.வெ.க., பிரமுகர், பிறந்தநாளை முன்னிட்டு பட்டாக்கத்தியில் கேக் வெட்டியது சர்ச்சைக்குள்ளானது.
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 30; த.வெ.க., உறுப்பினர். டி.வி.கே., என்ற பெயரில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவை ரோட்டில் உள்ள பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் முன்பாக, நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
அப்போது, ஆம்புலன்ஸ் ஸ்டெச்சரில் கேக் வைத்து, பட்டாக்கத்தியில் கேக் வெட்டி நண்பர்களுக்கு வழங்கினார். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவும் செய்தார். வீடியோ வைரலானதை தொடர்ந்து, பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய சுரேஷ், மற்றும் அவருடன் இருந்த திவான்சாபுதுாரை சேர்ந்த வாஞ்சிநாதன், 26, மரப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ், 27, ஆகியோரிடம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
