UPDATED : நவ 13, 2026 07:13 PM
ADDED : நவ 13, 2026 07:08 PM

ஊட்டி:
நீலிகிரி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும், 43 ஆயிரத்து, 668 மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
குழந்தைகள் தினவிழாவை ஒட்டி, ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் முதல்வரின் வாழ்த்து அட்டை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்கும் கேக், அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நீலகிரி மாவட்டத்தில், 516 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 43 ஆயிரத்து, 668 மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதே போல, மாவட்டத்தில், 490 அங்கன்வாடி மையங்களில் பயிலும், 6,150 குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 368 மகளிர் குழுக்களுக்கு, 41.54 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் வாழும் மக்கள் வன விலங்குகளால் பலியாவதை தவிர்க்க பாதுகாப்பாக இருக்க வேண்டும். அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசிக்க வேண்டும்,’ என்றார்.
ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., போஜராஜன் பேசுகையில், ‘‘ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 10 தொழிற்சாலைகள் அமைக்க, 5 லட்சம் முதல், 5 கோடி ரூபாய் வரை நிதி உதவி வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள தொகுதி மக்கள் முன் வர வேண்டும்,’’ என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் கஷாப் சசாங் ரவி, ஆர்.டி.ஓ., டினு அரவிந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
