பட்டாம்பி தொகுதியில் மும்முனைப் போட்டி: வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு பிரசாரம்
பட்டாம்பி தொகுதியில் மும்முனைப் போட்டி: வளர்ச்சி பணிகளை பட்டியலிட்டு பிரசாரம்
ADDED : மார் 31, 2026 06:40 PM

பாலக்காடு: கேரளாவில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பட்டாம்பி தொகுதியில் இடதுசாரி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கேரள மாநிலத்தில், வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி தொகுதியில், மா.கம்யூ. தலைமையிலான இடது ஜனநாயக கூட்டணி (எல்.டி.எப்.), காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யு.டி.எப்.), பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
மூன்றாவது முறை கடந்த, 2016 முதல் பட்டாம்பி தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் முகமது முஹசின், இந்த முறையும் எல்.டி.எப்., வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்திய கம்யூ., கட்சிக்குள் அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், அவரது மக்கள் செல்வாக்கை உணர்ந்து மா.கம்யூ., கட்சியின் தலைமை அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், முகமது முஹசின் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிக்காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்ததாக அவர் கூறுகிறார். பட்டாம்பி டயாலிசிஸ் மையம், புதிய பாலம், ஸ்ரீ நாராயண குரு திறந்தநிலை பல்கலைக்கழக மையம், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் நகராட்சி டவர் போன்ற திட்டங்களை பட்டியலிட்டு மக்களை சந்திக்கிறார். இந்த பிரசாரம் தேர்தல் வெற்றிக்கு கைகொடுக்கும் என இடதுசாரிகள் நம்புகின்றனர்.
யு.டி.எப்.-, பதிலடி பட்டாம்பி தொகுதி, ஆரம்பத்தில் முஸ்லிம் லீக் கட்சிக்குச் ஒதுக்கப்படும் எனப் பேசப்பட்டாலும், இறுதியில் காங்., போட்டியிட முடிவெடுத்தது. முன்னாள் நகராட்சி தலைவர் ஷாஜி, வேட்பாளராக களமிறக்கப்பட்டார். கடந்த முறை போட்டியிட்ட ரியாஸ் முக்கோளி தனக்கு வாய்ப்பு கிடைக்காத போதும், கட்சி விசுவாசத்துடன் ஷாஜியின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார்.
உள்ளாட்சித் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தலிலும் பட்டாம்பியில் தங்களுக்கு கிடைத்துள்ள பெரும் ஓட்டு வித்தியாசம் சாதகமாக அமையும் என காங்., கருதுகிறது. எல்.டி.எப்., வேட்பாளர் கூறும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஊதி பெரிதாக்கப்பட்டவை. பட்டாம்பி தாலுகா உருவாக்கம் உள்ளிட்ட உண்மையான வளர்ச்சித் திட்டங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில்தான் வந்தன என்றும் யு.டி.எப்., குற்றம் சாட்டுகிறது.
பா.ஜ., வியூகம் பா.ஜ. சார்பில் கட்சியின் மண்டலச் செயலாளர் வக்கீல் மனோஜ் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலை விட உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ., கணிசமான ஓட்டு பெற்றுள்ளதால், தற்போது கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும் என, பா.ஜ., நம்புகிறது.
இதுதவிர, எஸ்.டி.பி.ஐ., அமைப்பு சார்பில் அமீர்அலியும் போட்டியில் உள்ளார். வளர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் எல்.டி.எப்., உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை கணக்கிட்டு பலம் காட்டும் யு.டி.எப்., மற்றும் பா.ஜ., இடையே தான் இம்முறை கடும் போட்டி நிலவுகிறது.
