மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: கவுரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: கவுரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு
UPDATED : ஜூலை 16, 2026 05:42 PM
ADDED : ஜூலை 16, 2026 05:35 PM
ஊட்டி: 'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு சென்றால் கற்பித்தல் பணி பாதிக்கப்படும்,' என, கவுரவ விரிவுரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் உள்ள பல்வேறு துறைகளில், 105 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள்,மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக, ஊட்டி நகராட்சி சார்பில் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் அழைக்கப்பட்டு கடந்த,14ம் தேதி முதல் 16ம் வரை மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைக்கப்பட்டனர்.
பயிற்சியில் யாரும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து, நகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், கவுரவ விரிவுரையாளர்களுக்கு 'மெமோ' வழங்கியுள்ளனர். இதற்காக, கல்லுாரி வளாகத்தில் காலை கவுரவ விரிவுரையாளர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இயற்பியல் துறை கவுரவ விரிவுரையாளர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறுகையில், ''கல்லுாரியில் பணிபுரியும், கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிக பணியில் தான் உள்ளோம். 2009 ம் ஆண்டில் உள்ள அரசாணையில் கவுரவ விரிவுரையாளர்கள் கற்பித்த பணியை தவிர வேறு பணிக்கு அனுப்ப கூடாதென்ற அரசாணை உள்ளது. எங்களால் இப்பணியில் ஈடுபட முடியாது என்பதை ஏற்கனவே கல்லுாரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம்,'' என்றார்
