/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் புறக்கணிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை : காற்றில் பறக்குது வாக்குறுதிகள்
/
மலையில் புறக்கணிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை : காற்றில் பறக்குது வாக்குறுதிகள்
மலையில் புறக்கணிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை : காற்றில் பறக்குது வாக்குறுதிகள்
மலையில் புறக்கணிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை : காற்றில் பறக்குது வாக்குறுதிகள்
ADDED : மே 13, 2025 10:51 PM

பந்தலுார்,; பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாத நிலையில், மலை மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பண்டைய பழங்குடியின மக்களான, இருளர், கோத்தர், குரும்பர், தோடர், பணியர், காட்டுநாயக்கர் ஆகிய சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த, 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நீலகிரியில், 27,032 பேர் மட்டுமே வாழ்ந்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இது மாவட்ட மொத்த மக்கள் தொகையில், 4.6 சதவீதம் ஆகும்.
பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய-, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கி வருகின்றன. இந்த திட்டங்களால் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மேம்பட்டுள்ளதா என்பது குறித்து பெரும்பாலான கிராமங்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.
மாறாக அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் கூறும், தகவல்களை அடிப்படையாக வைத்து நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு மட்டும் அரசுக்கு காட்டப்பட்டு வருகிறது. பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக செயல்படும் பல அரசு உயர் அதிகாரிகளுக்கு, நீலகிரியில் உள்ள பழங்குடியினர் கிராமங்கள் மற்றும் அவற்றின் நிலை குறித்து தெரியாத சூழல் தற்போதும் தொடர்கிறது. அவர்கள் கால்தடம் கூட பல கிராமங்களில் பட்டதில்லை.
அடிப்படை வசதி கூட இல்லை
பல பழங்குடியினர் கிராமங்களில், குடியிருப்புகள், சாலை, நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற வசதிகள், பெயரளவிற்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் மண்ணின் மைந்தர்கள் என்று பெருமைப்படும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை கற்கால வாழ்க்கை போலவே உள்ளது.
போலீசார், வருவாய் துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகம், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், மாதம் தோறும் பழங்குடியினர் கிராமங்களுக்கு நேரில் சென்று, அவர்களின் குறைகள் குறித்து நேரில் ஆய்வு செய்த போதும், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் எவ்வித மாற்றங்களும் கிராமங்களில் ஏற்படவில்லை. மாறாக அரசு அதிகாரிகள் எளிதாக செல்லும் இடங்களில் உள்ள சில பழங்குடியின கிராம மக்களின் வாழ்க்கை மட்டுமே மேம்பட்டு வருகிறது.
மலை மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில், அழிவின் விளிம்பில் உள்ள கடைக்கோடி பழங்குடியின கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இளைய தலைமுறை பழங்குடியின சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.
விசாரணை குழு அமைக்க வேண்டும்
பண்டைய பழங்குடியினர் சமுதாய நிர்வாகி நீலகண்டன் கூறுகையில், ''பழங்குடியின மக்களான எங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் நிதிகளை ஒதுக்கி வருகின்றன.
ஆனால், உள்ளூர் அதிகாரிகள் இந்த நிதிகளை முறையாக செலவிட்டு இருந்தால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பழங்குடியின கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறி இருக்கும்.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால், பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது.
கடந்த, 50 ஆண்டுகளில் பழங்குடியின மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட குழுவை மாநில அரசு அமைக்க வேண்டும்,''என்றார்.