/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் அய்யன்கொல்லி கல்லுமுக்கு பகுதியில் உருக்குலைந்த 'சிட்டிசன்' கிராமம்! வனத்துறை கெடுபிடியால் 'சிதறி போன' பழங்குடிகள்
/
பந்தலுார் அய்யன்கொல்லி கல்லுமுக்கு பகுதியில் உருக்குலைந்த 'சிட்டிசன்' கிராமம்! வனத்துறை கெடுபிடியால் 'சிதறி போன' பழங்குடிகள்
பந்தலுார் அய்யன்கொல்லி கல்லுமுக்கு பகுதியில் உருக்குலைந்த 'சிட்டிசன்' கிராமம்! வனத்துறை கெடுபிடியால் 'சிதறி போன' பழங்குடிகள்
பந்தலுார் அய்யன்கொல்லி கல்லுமுக்கு பகுதியில் உருக்குலைந்த 'சிட்டிசன்' கிராமம்! வனத்துறை கெடுபிடியால் 'சிதறி போன' பழங்குடிகள்
ADDED : டிச 06, 2024 10:58 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில், பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த, பழங்குடியினர் கிராமம் காணாமல் போனது, உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு, குரும்பர், காட்டுநாயக்கர், பணியர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், அந்த நிதி முழுமையாக செலவிடப்படுகிறதா என்று சந்தேகம் எழும் அளவுக்கு, பந்தலுாரில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
காணாமல் போன கிராமம்
இந்நிலையில், பந்தலுார் அருகே அய்யன்கொல்லி கல்லுமுக்கு என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு பணியர் சமுதாய மக்கள், 10 குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் குடிசை வீடுகள் காலப்போக்கில் வலுவிழந்து சேதமானதால், புதிதாக குடியிருப்புகள் கட்டித்தர ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வீடுகள் கட்ட வனத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வீடு இல்லாத நிலையில், ஒவ்வொரு குடும்பமாக, அருகில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தன.
வீடு கட்டவும் வனத்துறை எதிர்ப்பு
இறுதியாக அப்பகுதியில் ஷோபா என்ற பழங்குடியின பெண் வசித்து வந்த நிலையில் அவரது வீடும் இடிந்தது. அதனையடுத்து ஊராட்சி மூலம் வீடு கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து, சுவர் மட்டுமே எழுப்பப்பட்டது.
அங்கு வந்த வனத்துறையினர், 'இங்கு வீடு கட்டக்கூடாது,' என, ஊராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணியும் பாதியில் விடப்பட்டு உள்ளது.
இதனால், அவரும் தற்போது, 'முகவரி' அறியாத வேறு பகுதிக்கு இடம் பெற்றுள்ளார். இவர்கள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக அவர்களின் 'குலதெய்வ' கோவில் அமைந்துள்ளது.
பழங்குடியினரிடம் பாரபட்சம் ஏன்?
இந்த கிராமத்தின் அருகே தனியார் கோழிப்பண்ணை அமைந்துள்ள நிலையில், பழங்குடியின மக்களை மட்டும், இங்கு குடியிருக்க விடாமல்; அரசின் விடுகளை கட்ட விடாமல், வனத்துறையினர் விரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த நீலகிரி 'மண்ணின் மைந்தர்களான' பழங்குடியினரின் கிராமம் காணாமல் போயுள்ளது. இதனை கேட்க எந்த அரசு அதிகாரிகளும் வரவில்லை என்பது வேதனையான உண்மை.
'எங்கள் குலத்தை காப்பாற்றுங்கள்'
இந்த கிராமத்தில் வசித்து வந்த குஞ்சன் என்பவர் கூறுகையில், ''வனத்துறையினரின் தொடர் கெடுபிடியால், இங்கு வசிக்க முடியாமல், பல்வேறு கிராமங்களுக்கும் சிதறி சென்று உறவுகளை பிரிந்து 'உயிருடன் மட்டும்' வசித்து வருகிறோம்.
இன்று எங்கள் கிராமத்தை காணவில்லை. சுவடுகளாக, குடியிருந்த வீடுகளின் அடித்தளங்கள்; எங்கள் முன்னோர்களை அடக்கம் செய்த இடம்; குலதெய்வ கோவில் ஆகியவை உள்ளன.
பிற பகுதிகளை போல, எங்களுக்கு அரசின் மறு குடியமர்வு திட்டத்தில் இடம் ஒதுக்கி வீடுகட்டி தந்தால், எங்கள் குலம் காப்பாற்றப்படும்,'' என்றார்.
சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் கூறுகையில், ''இது குறித்து இதுவரை எனக்கு தகவல் வரவில்லை. நான் நேரில் ஆய்வு செய்த பின்னர், அவர்களுக்கு வீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர, வன உயர் அதிகாரி மூலம் நடவடிக்கை எடுப்பேன்,'' என்றார்.