சாலையோரம் மூடப்படாத குழி :இரவில் மக்கள் நடமாடுவதில் சிரமம்
சாலையோரம் மூடப்படாத குழி :இரவில் மக்கள் நடமாடுவதில் சிரமம்
UPDATED : நவ 02, 2026 04:39 PM
ADDED : நவ 02, 2026 02:32 PM

கூடலுார்:கூடலுார், இரும்புபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க தோண்டப்பட்ட குழிகள், மூடப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் இரும்புபாலம் அருகே, புளியாம்பாறை ஆற்றின் குறுக்கே, குடிநீர் பயன்பாட்டுக்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணையை ஒட்டி, மண் சரிவு ஏற்படுவதை தடுக்க நெடுஞ்சாலை துறை சார்பில், சாலையோரம் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்புச்சுவரை ஒட்டி இரும்பு தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு குழிகள் தோண்டப்பட்டு, பணியும் நடக்கவில்லை. தோண்டப்பட்ட குழிகள் மூடப்படவில்லை.
அப்பகுதியில் செடிகள் வளர்ந்து குழிகளின் மேற்பரப்பில் படர்ந்துள்ளதால், மூடப்படாத குழிகள் இருப்பது தெரிவதில்லை. அப்பகுதியில் நடந்து செல்பவர்கள் குழிக்களில் கால்கள் சிக்கி தடுமாறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இதனை சீரமைக்க வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உதவி செயற் பொறியாளர் பிரகாஷ் கூறுகையில், ''அப்பகுதியில் ஆய்வு செய்து, குழிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
