/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அறுவடைக்கு முன் பூத்த காபி பூக்கள்: விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல்
/
அறுவடைக்கு முன் பூத்த காபி பூக்கள்: விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல்
அறுவடைக்கு முன் பூத்த காபி பூக்கள்: விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல்
அறுவடைக்கு முன் பூத்த காபி பூக்கள்: விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல்
ADDED : டிச 10, 2025 08:11 AM

கூடலுார்: கூடலுாரில் அறுவடை பணி துவங்கும் முன் செடிகளில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கூடலுார், பந்தலுார் பகுதியில், தனியார் எஸ்டேட் மற்றும் சிறு விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிட்டுள்ளனர். இப்பகுதியில், அரபிக்கா, ரொபஸ்டா வகை காபி செடிகள், 16ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். அதில், 'ரொபஸ்டா' 10,700 ஏக்கர் ஆகும். காபி, மார்ச் ஏப்., மாதங்களில் பூ பூக்கும். நவ., முதல் ஜன., மாதங்களில் அறுவடை நடக்கும்.
தற்போது, கூடலுார், பந்தலுார் பகுதியில் அரபிக்கா ரக காபி பறிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் ரொபஸ்டா காபி அறுவடை பணி துவங்க உள்ளது. இந்நிலையில், கூடலுார் பகுதியில் பல பகுதிகளில் காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளது. இதனால், மகசூல் பாதிக்கும் எனபதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'அறுவடைக்கு முன்பாக காபி பூ பூத்திருப்பது, மகசூலை பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
கூடலுார் காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் கூறுகையில், ''கூடலுார் பகுதியில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காணப்பட்டதால், சில பகுதிகளில் சில காபி செடிகளில் பூக்கள் பூத்துள்ளது. இவைகள் விரைவில் உதிர்ந்து விடும். காபி மகசூலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதே நேரம் இந்த மழை 'ரொபஸ்டா' காபி விரைவாக பழுக்கவும், அடுத்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்க உதவியாக உள்ளது. எனவே, அறுவடை துவங்கும் முன், காபி செடிகளில் பூக்கள் விரைவில் உதிர்ந்து விடும். மகசூல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைய தேவையில்லை,'' என்றார்.

