/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி:சிறு விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
/
சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி:சிறு விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி:சிறு விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி:சிறு விவசாயிகள் பாதிக்கும் அபாயம்
ADDED : நவ 28, 2025 03:25 AM
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் சீசனுக்கு முன்பே காபி காய்கள் பழுக்க துவங்கின.
பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகள், கேரளா வயநாடு பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், இங்கு,தேயிலைக்கு அடுத்தபடியாக காபி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
அதில், 2,400 ஏக்கர் பரப்பளவில், 'அரபிக்கா' வகை காபி; 4,500 ஏக்கர் பரப்பளவில், 'ரொபஸ்டா' வகை காபியும் பயிரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு, 4,500 டன் காபி கொட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்கு பின், காபி செடிகளில் பூக்கள் பூக்க துவங்கும். தொடர்ந்து, காபி காய்க்க துவங்கி, டிச., 20க்கு பின்னர் காய்கள் பழுத்து அறுவடைக்கு தயார் ஆகும்.
ஆனால், நடப்பு ஆண்டு மார்ச் மாதம் முதலே காபி செடிகளில் பூக்கள் பூத்தது. தொடர்ந்து, அவ்வப்போது தலைகாட்டிய மழையால் காய்களும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே காய்த்தது. மேலும், நடப்பு ஆண்டு கோடை கால துவங்கியும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காபி காய்கள் பழுத்து தற்போதே அறுவடைக்கு தயாராகி விட்டது.
தற்போது, அறுவடை செய்யப்படும் பழுத்த காபி, கொட்டைகளை உலர்த்தி பதப்படுத்த முடியாத நிலையில், தொடர்ந்து மழை பெய்வதுடன், மேக மூட்டமான காலநிலை நிலவி வருகிறது. விவசாயிகள் கூறுகையில், ' தற்போது பெய்து வரும் மழையால், காபி கொட்டைகளை பறித்தாலும், உலர வைக்க முடியாத காலநிலை நிலவுகிறது. இதனால், நடப்பு ஆண்டு காபி விவசாயம் கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் மட்டுமே நிலவுவதால், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

