ADDED : நவ 18, 2026 07:23 PM

ஊட்டி: ஊட்டியில் உறைபனி பொழிவால் கடுங்குளிர் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கடந்த சில நாட்களாக அவ்வப்போது நீர் பனி தென்பட்டது. இந்நிலையில், இன்று (நவ.,18) காலை, ஊட்டி, காந்தள், தலைகுந்தா பகுதிகளில் உறை பனி தென்பட்டது. புல்வெளிகளில் வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் பனி காணப்பட்டது. இதனால், ஊட்டியில் அதிகபட்சம், 13 டிகிரி செல்சியஸ் , குறைந்தபட்சம், 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
அதிகாலையில் கடுங்குளிர் நிலவியதால் தோட்ட பணிக்கு செல்பவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர். தாவரவியல் பூங்காவில், சுற்றுலா பயணியர் பனி பொழிவை ரசித்து போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். உறைப்பனியால் மலை காய்கறி, தேயிலை செடிகள் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
