/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளிகளில் கழிப்பிட பணி; முறைகேடு நடந்ததாக புகார்
/
பள்ளிகளில் கழிப்பிட பணி; முறைகேடு நடந்ததாக புகார்
ADDED : ஜன 02, 2025 09:47 PM

கூடலுார்; 'ரெப்கோ ஹோம் பைனான்ஸ்' மூலம், அரசு பள்ளிகளில், கழிப்பிடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கூடலுார், ஜானகி அம்மாள் அரங்கில், ரெப்கோ வங்கி ஊழல் எதிர்ப்பு கூட்டுஇயக்கம், சார்பில் ஆலோசனை கூட்டம், ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா தலைமையில் நடந்தது. அமைப்பாளர் ராமேஸ்வரன், முருகன், வேலுராஜேந்திரன், தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ரெப்கோ வங்கி வீட்டு கடன் வசதி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம், கூடலுார் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பிடம் கட்டுவதில் நடைபெறும் முறைகேடு புகார் குறித்து ஆலோசனை நடந்தது.அதில், ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா பேசியதாவது:
கூடலுாரில் ரெப்கோ வங்கி வீட்டு கடன் வசதி நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மூலம், தாயகம் திரும்பியோரின் பிள்ளைகள் கல்வி பயின்று வரும், 12 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு,1.20 கோடி ரூபாய் நிதியில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகை, பள்ளி தலைமை ஆசிரியருக்கு காசோலை மூலம் வழங்கப்பட்டது.
பணிகளை பள்ளி மேலாண்மை குழு முறையாக ஒப்பந்தம் வழங்கி மேற்கொள்ளாமல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பணத்தை பெற்று, அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் பள்ளிகளில் தரமற்ற கழிப்பிடங்களை கட்டி வருகின்றனர்.
இதில், பெரும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, அரசு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இது, தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெறப்பட்ட நிதியை திரும்ப பெற வேண்டும்.
பணிகள் துவங்கும் முன்பே, பணத்தை ஒப்பந்தர்களுக்கு வழங்கிய ஆசிரியர் மீதும்; இதற்கு, காரணமான வங்கி பிரதிநிதிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், அமைப்பின் நிர்வாகி கந்தையா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

