/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நம்பிக்கையூட்டும் கணிதம்: மாணவர்களுக்கான பயிற்சி
/
நம்பிக்கையூட்டும் கணிதம்: மாணவர்களுக்கான பயிற்சி
ADDED : பிப் 14, 2024 09:45 PM
கோத்தகிரி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே, அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வம் துாண்டும் வகையில், 'நம்பிக்கையூட்டும் கணிதம்' என்ற தலைப்பில், பள்ளிகளில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 250 வது பயிற்சி முகாம், மஞ்சூர் கோகலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை (பொ) தேவகி தலைமை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன் பேசுகையில், ''இந்த பள்ளி தேசிய அளவில் புகழ்பெற்ற இரண்டு விஞ்ஞானிகளை உருவாக்கிய பெருமை கொண்டது. அவர்களில் ஒருவர் இஸ்ரோவின் ஓய்வு பெற்ற இயக்குனர் டாக்டர் போஜராஜன். இரண்டாவதாக, எலும்பு மஜ்ஜையில் இருந்து உடல் உறுப்புகளை உருவாக்கும் 'ஸ்டெம்செல்' தொழில் நுட்பத்தில் நிபுணரான அவரது சகோதரர் டாக்டர் தேவராஜ்.
எனவே, கிராமப்புற மாணவர்களிடம் அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்துள்ளது. இதனை மாணவர்கள் புரிந்துக்கொண்டு தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார்.
சிறப்பு கருத்தாளராக பங்கேற்ற, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசுகையில், ''கணிதத்தை அடிப்படையாக கொண்ட 'ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும் நவீன அறிவியல் துறை, ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான 'எலான் மஸ்க்கின்' ஆய்வு நிறுவனம், மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் மூளைக்குள் சிலிக்கான் துகள்களை செலுத்தி, வெளியில் இருந்து கம்ப்யூட்டர் மூலம், அவர்களின் மூளைகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தி அவர்கள் இயல்பான வாழ்க்கை வாழ உதவி புரியும் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம், ஆங்கில அறிவியல் திரைப்படங்களில் வருவதைப் போல சாதாரண மனிதர்களின் மூளை செயல்பாடுகளை வெளியிலிருந்து கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் உருவானால், ஒட்டு மொத்த மனிதர்களின் சிந்தனையையும் செயல்பாடுகளையும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தும் ஆபத்தும் உள்ளது,'' என்றார்.
அதில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி உட்பட, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
வானவில் மன்ற பொறுப்பாசிரியர் திமோதி வரவேற்றார். ஆசிரியர் சுதாகரன் நன்றியுரை வழங்கினார்.

