/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் - மேட்டுப்பாளையம் அரசு பஸ்கள் நிறுத்தம்; காலை நேரங்களில் பயணிகளுக்கு சிரமம்
/
குன்னுார் - மேட்டுப்பாளையம் அரசு பஸ்கள் நிறுத்தம்; காலை நேரங்களில் பயணிகளுக்கு சிரமம்
குன்னுார் - மேட்டுப்பாளையம் அரசு பஸ்கள் நிறுத்தம்; காலை நேரங்களில் பயணிகளுக்கு சிரமம்
குன்னுார் - மேட்டுப்பாளையம் அரசு பஸ்கள் நிறுத்தம்; காலை நேரங்களில் பயணிகளுக்கு சிரமம்
ADDED : ஆக 04, 2025 07:48 PM
குன்னுார்; குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
குன்னுார் கிளை போக்குவரத்து கழகம் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதனால், காந்திபுரம், காட்டேரி, பால்கார லைன், டபுள் ரோடு, காட்டேரி பூங்கா, சின்ன குரும்பாடி, குரும்பாடி, புதுக்காடு, கோழிக்கரை, பர்லியார் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இந்த பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதால், குன்னுாரில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில், ஊட்டியில் இருந்து வரும் அரசு பஸ்களை நம்பி பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனினும் கூட்ட நெரிசலால், மலை பாதையில் நின்று கொண்டே, பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.
தற்போது, தங்காடு, கன்னேரி மந்தனை உட்பட சில கிராம பஸ்கள், மேட்டுப்பாளையத்திற்கு இயக்குவதை நம்பி பலர் பயணம் செய்கின்றனர்.
குரும்பாடி மற்றும் பர்லியார் பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் மகளிர் விடியல் பயணம் இயக்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள பழங்குடியின கிராம மக்களுக்கு விடியல் பயணம் இல்லை.
ஏற்கனவே, குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் லோக்கல் அரசு பஸ் இயக்கப்படாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, மாலை, 5:30 மணிக்கு குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு, இயக்கப்பட்ட அரசு பஸ் மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனாக இருந்தது.
பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இவ்வழியாக, ஊட்டி செல்லும் சில 'எக்ஸ்பிரஸ்' அரசு பஸ்களில் மனிதாபிமானத்துடன் ஏற்றி செல்கின்றனர். எனினும், காலை, 8:00 மணி முதல் 8:30 மணி வரையில் குரும்பாடி அருகே வரும் ஊட்டி அரசு பஸ்கள் நிறுத்துவதில்லை.
குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டியுள்ளதால், 'எக்ஸ்பிரஸ்' பஸ்களில், 20 ரூபாய் கொடுத்து சென்றாலும், அனைத்து பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏற்கனவே, குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்,' என்றனர்.