விரக்தியில் முதியவர் தற்கொலை
மேட்டுப்பாளையம் எஸ்.எம். நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 80. இவர் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்து வந்த நிலையில், முட்டி தேய்மானம் காரணமாக கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
வேலைக்கு செல்ல முடியவில்லை, என்னால் எந்த பயனும் இல்லை என தனது குடும்பத்தினரிடம் சொல்லி புலம்பியுள்ளார். இதனிடையே அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் இடது கையும் செயல்படாமல் போனது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் கந்தசாமி இருந்தார். இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டிற்கு அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
----தொழிலாளி போக்சோவில் கைது
மேட்டுப்பாளையம் வினோபாஜி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 20. கூலி தொழிலாளி. இவர் 11 வயது சிறுவனை செங்கல் சூளைக்கு அருகே உள்ள புதூருக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
மேலும், இதை யாரிடமாவது சொன்னால், கை, கால்களை உடைத்து கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். அதனால் சிறுவன் யாரிடமும் சிறிது நாள் சொல்லாமல் இருந்துள்ளான். பின் மீண்டும் சிறுவனை, மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ஆற்றிற்கு மேல் உள்ள காடு பகுதிக்கு ஸ்ரீகாந்த் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார்.
அங்கிருந்து தப்பிய சிறுவன், தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின், பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, போக்சோ வழக்கில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.