UPDATED : ஜூலை 05, 2026 07:03 PM
ADDED : ஜூலை 05, 2026 07:01 PM
குன்னூர் பெட்டி கடையை உடைத்து பணத்தை திருடிய திருடனை போலீசார் கைது செய்தனர். குன்னூர் கான்வென்ட் சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் மரிய லியோ .
கடந்த 2 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார். அடுத்த நாள் காலையில் வந்து பார்த்த போது பூட்டு உடைத்து ஆயிரம் ரூபாய் வரை, திருடப்பட்டது தெரிய வந்தது.
வழக்கு பதிவு செய்த அப்பர் குன்னூர் போலீசார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் குற்ற தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர்.
இதில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார், 56 என்பவர் திருடியது தெரிய வந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.
உண்டியல் பணம் திருட்டு
பந்தலூர் அருகே முதிரக்கொல்லி பகுதியில், பகல் நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்த நபர் மீது புகார்.
நெலாக்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், முதிரக்கொல்லி கிராமம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த பால பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்திற்கு நேற்று மதியம் வந்த நபர் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றுள்ளார். சி.சி.டி.வி. கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. சோலாடி கிராமத்தை சேர்ந்த ராஜன், 40, என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கோவில் கமிட்டி செயலாளர் சுஜித் நெலாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபருக்கு 'காப்பு'
பந்தலூர் பஜார் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.எஸ்.ஐ., ஹரிஹரன், மதுவிலக்கு போலீஸ் தலைமை காவலர் சந்திரன் உள்ளிட்ட குழுவினர், நேற்று காலை பந்தலூரில் ஆய்வு மேற்கொண்டனர். பந்தலூர் ஹட்டி பகுதியைச் சேர்ந்த பிரவீன், 26 என்பவர் பிளாஸ்டிக் கவர்களில், வீட்டுக்கு பின்புறம் மறைத்து வைத்திருந்த, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர் கேரளா மாநிலத்தில் இருந்து, மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
--
