அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான பாறைகள்: அடுத்த மழை வருவதற்குள் அகற்றப்படுமா...?
அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான பாறைகள்: அடுத்த மழை வருவதற்குள் அகற்றப்படுமா...?
UPDATED : நவ 12, 2026 01:57 PM
ADDED : நவ 12, 2026 01:54 PM

குன்னுார்: குன்னுார் மேட்டுப்பாளையம் மலை பாதையில் பர்லியாரில் கோவை கொட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நீலகிரிக்கு உட்பட்ட இடங்களில அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான பாறைகளை அகற்றப்படாமல் உள்ளது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பர்லியார் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அபாயகரமான பாறைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதிகளில் பணிகள் நடந்து வந்த போதும், நீலகிரி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட குன்னூர் சாலையோர பகுதிகளில் பணிகள் நடக்காமல் உள்ளது.
நிலச்சரிவு மற்றும் சீரமைப்பு பணிகள் காரணமாக, கடந்த, 20 நாட்களாக அப்பகுதியில் தொடர் போக்குவரத்து தடை நீடித்து வரும் நிலையில், உருண்டு விழும் அபாயத்தில் உள்ள பல பாறைகளை உடனடியாக அகற்ற வருவாய் துறையினர் அதிகாரிகள், நெடுஞ்சாலை துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
எனினும், நந்தகோபால பாலம் அருகே மலைப் பாதையில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. மேலும், குரும்பாடி பகுதிக்கு அருகிலும் சாலையில் விழுந்த கற்களும், மண் சரிவும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளன.
குன்னுார் மக்கள் கூறுகையில், ‘ குன்னுார் சாலையோர பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் களமிறங்கி, ஆபத்தான பாறைகள் மற்றும் மரங்களை அகற்ற நடவடிக்கை வேண்டும். இந்த சாலை போக்குவரத்து திறக்கப்பட்ட பிறகு பணிகள் மேற்கொள்வதை விட, போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும்,’ என்றனர்.
