/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறந்த யானையின் தந்தங்கள் மாயம்; ஆறு தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை
/
இறந்த யானையின் தந்தங்கள் மாயம்; ஆறு தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை
இறந்த யானையின் தந்தங்கள் மாயம்; ஆறு தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை
இறந்த யானையின் தந்தங்கள் மாயம்; ஆறு தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை
ADDED : ஆக 07, 2025 06:39 AM

கூடலுார்; முதுமலை, மசினகுடி அருகே, தனியார் இடத்தில், மூன்று மாதங்களுக்கு முன் இறந்த காட்டு யானையின் தந்தங்கள் காணாமல் போனது குறித்து, வனத்துறையினர் ஆறு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டம், சிங்கார வனச்சரகம், பொக்காபுரம் காவல் பகுதிக்கு உட்பட்ட தனியார் இடத்தில், நீரோடை அருகே, இறந்த யானையின் எலும்பு கூடுகளை கிடப்பது நேற்று முன்தினம், வனத்துறைக்கு தெரியவந்தது.
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் தனபால் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானையின் உடல் முற்றிலும் அழிந்து, எலும்புகள் மட்டும் காணப்பட்டதுடன், அதன் இரண்டு தந்தங்களும் காணாமல் போனது கண்டறியப்பட்டது.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், பறக்கும் படை உதவி வன பாதுகாவலர் கிருபாகரன், வனச்சரகர் தனபால் ஆகியோர், உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் கூறுகையில், ''இறந்து மூன்று மாதங்கள் ஆன, ஆண் யானைக்கு, 45 முதல் 50 வயது இருக்கும். அதன் தந்தங்கள் காணாமல் போனது குறித்து, வனச்சரகர் தலைமையில் ஆறு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு தந்தங்கள் மீட்கப்படும்,'' என்றார்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ''இப்பகுதி யானைகள் முக்கிய வாழ்விடம் மட்டுமின்றி, யானை வழித்தடமாகவும் உள்ளது.
தனியார் இடத்தில், யானை இறந்து, அதன் தந்தங்களும் காணாமல் போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் கைது செய்து தந்தத்தை மீட்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.