/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழமையான அரசு குடியிருப்புகள் அகற்றம்
/
பழமையான அரசு குடியிருப்புகள் அகற்றம்
ADDED : நவ 14, 2025 09:02 PM
கூடலுார்: கூடலுார் அரசு தோட்டக்கலை பண்ணையில், குடியிருப்பு இடிந்து விழுந்து மூன்று பேர் காயமடைந்த நிலையில், குடியிருப்புகளை இடிக்கும் பணி துவங்கியது.
கூடலுார் நாடுகாணி அருகே, பொன்னுார் பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணை, 45 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு, பல கட்டடங்கள் பராமரிப்பு இல்லாமல் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. அதில், பயன்படுத்தாத குடியிருப்புகளில் ஒன்று, நேற்று முன்தினம் இடிந்து விழுந்து, மூன்று பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, பண்ணையில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்து அகற்றும் பணியை நேற்று துவங்கியுள்ளனர். இதனால், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில்,' இந்த குடியிருப்புகளை ஏற்கனவே இடித்து அகற்றியிருந்தால், பழமையான குடியிருப்பு இடிந்து விழுந்து, 3 தொழிலாளர்கள் படுகாயமடையால் இருந்திருப்பர்.
எனவே, இதுபோன்று சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க, கூடலுார் பகுதியில் சேதமடைந்து பயன்படுதாமல் உள்ள பழமையான அரசு குடியிருப்புகளை ஆய்வு செய்து, அதனை இடித்து அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், எதிர்காலத்தில் அசம்பாவிதம் நடப்பது தவிர்க்கப்படும்,' என்றனர்.

