ADDED : செப் 20, 2026 05:02 PM
கலெக்டர் ஆய்வு
கோத்தகிரி: -
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, கிராம ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.
அதன்படி, கடினமாலா ஊராட்சி கொப்பையூரில், பிரதான் மந்திரி ஜென்மம் திட்டத்தில், 5.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும், 13 தொகுப்பு வீடுகள், கோழிக்குட்டையில், எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 52.63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர், 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் சாலை பணியை ஆய்வு செய்தார்.
அரக்கோடு ஊராட்சி, கரிக்கையூர் ஜி.டி. ஆர்., பள்ளி சமையல் அறை, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், குழந்தைகளின் வருகை, அங்குள்ள நலவாழ்வு மையத்தின் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
தேனாடு ஊராட்சி, சோலூர்மட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை ஆய்வு செய்த அவர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
நெடுகுளா ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் சார்பில், 4.83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் சமுதாய கழிப்பிடம், விக்ஷித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன், 125 நாள் வேலை திட்டத்தில், நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணி, கோடநாடு ஊராட்சி அலுவலக செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
இதில், தாசில்தார் மகேந்திரகுமார், பி.டி.ஓ., சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
