ADDED : செப் 20, 2026 05:02 PM
பாலக்காடு: பாலக்காட்டில் மூன்று நாட்களாக நடைபெற்று வந்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான ‘சகோதயா’ மாவட்டக் கலைப்போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் 861 புள்ளிகள் பெற்று, போட்டியை முன்னின்று நடத்திய பாலக்காடு செயின்ட் ராபேல்ஸ் கதீட்ரல் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. பட்டாம்பி எம்.இ.எஸ். இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
போட்டியின் தொடக்க நாள் முதலே அனைத்துப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த செயின்ட் ராபேல்ஸ் பள்ளி மாணவர்கள், புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டனர்.
குறிப்பாக, பொதுப்பிரிவுப் போட்டிகள் அனைத்திலும் இப்பள்ளி மாணவர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்தது, அவர்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில், பாலக்காடு மறைமாவட்ட ஆயர் மார் பீட்டர் கொச்சுபுரக்கல் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். பாதிரியார் ஜோஷி புலிக்கோட்டில், சோனியா, சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதிலும் உள்ள 73 பள்ளிகளில் இருந்து, 4,356 மாணவ -மாணவியர் கலந்து கொண்டு தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர்.
