/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மதுரை தி.மு.க., பிரமுகர் மீது நிலமோசடி புகார்
/
மதுரை தி.மு.க., பிரமுகர் மீது நிலமோசடி புகார்
ADDED : ஜூலை 26, 2011 11:19 PM
ஊட்டி : 'நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆதிவாசிகளுக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, மதுரையை சேர்ந்த தி.மு.க., பிரமுகர், அவரின் மகன் ஆகியோர் ஓய்வு விடுதி கட்ட முயற்சி செய்கின்றனர்' என, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
நீலகிரியில் நில அபகரிப்பு தொடர்பாக விசாரிக்க கூடுதல் எஸ்.பி., காசி விஸ்வநாதன் தலைமையில், டி.எஸ்.பி., சக்கரவர்த்தி, 2 இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்.ஐ.,க்கள் மற்றும் 16 போலீசார் கொண்ட சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கட்ட பஞ்சாயத்து மூலம் ஆக்கிரமிப்பு, நிலங்களை மோசடி மூலம் கைப்பற்றியது தொடர்பான வழக்குகளை இவர்கள் விசாரித்து வருகின்றனர். நீலகிரியில் இது வரை 34 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தி.மு.க.,வினர் மீது மட்டும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடலூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் அரசு ஒதுக்கிய குடியிருப்புகளை அகற்றி, அப்பகுதியை தி.மு.க., பிரமுகர் அபகரிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள், நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் அளித்தனர். அவர்களில் ராஜா, வேலாயுதம், ரசாக் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி அண்ணாநகர் பகுதியில் 8.50 ஏக்கர் நிலம் (புதிய நில அளவை எண்:853/1) கடந்த 1980ம் ஆண்டு ஆதிவாசிகள் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்பட்ட நிலமாகும். அதன் பிறகு அப்போதைய மாவட்ட கலெக்டர் சுப்ரியா சாஹூ அப்பகுதியை சர்வே செய்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி குடியிருப்பதற்காக நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதன் பின் மதுரை தி.மு.க., பிரமுகர் துரை, அவரது மகன் சேகர் 250 வீடுகளை அப்புறப்படுத்தி அப்பகுதியில் காபி பயிரிட்டு, ஓய்வு விடுதி கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் பல குடிசை வீடுகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. எங்களை அப்புறப்படுத்த சில அரசு அதிகாரிகளின் துணையோடு முயற்சித்து வருகின்றனர். தி.மு.க., ஆட்சியின்போது பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிலத்திலிருந்து, எங்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தும் நபர்களிடமிருந்து, ஆதிவாசிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்டு, குடியிருந்த எங்களுக்கு இடத்தை பிரித்து ஒதுக்கி, வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்த விசாரணை துவக்கப்பட்டுள்ளது.