/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட கால்பந்து போட்டி: ஊட்டி அணி சாம்பியன்
/
மாவட்ட கால்பந்து போட்டி: ஊட்டி அணி சாம்பியன்
ADDED : நவ 10, 2025 11:37 PM

கோத்தகிரி: கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடந்த கால்பந்து இறுதிப்போட்டியில், ஊட்டி காந்தள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கோத்தகிரி காந்தி மைதானத்தில், உபதலை ஸ்ரீ சத்ய சாய் நிவாஸ் டிரஸ்ட் மற்றும் எல்லநள்ளி 'ஐ டு வி' கால்பந்து அகாடமி இணைந்து, மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியை நடத்தின.
இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கத்தை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலும், கடந்த இரண்டு மாதங்களாக நடந்த இப்போட்டி தொடரில், 58 தலைச்சிறந்த கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதி போட்டி, ஊட்டி காந்தள் புளுஸ் மற்றும் ஊட்டி நவீன் பிரதர்ஸ் அணிகள் இடையே நடந்தது. ஆட்டநேர இறுதிவரை, இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், ஆட்டம் சமன் ஆனது. மாலையில் இருள் சூழ்ந்த நிலையில், மின் விளக்கு ஒளியுடன், வெற்றி தோல்வியை நிர்ணயிக்க 'டைபிரேக்கர்' முறை கையாளப்பபட்டது.
இதில், காந்தள் புளுஸ் அணி, 5:4 என்ற கோல் கணக்கில், நவீன் பிரதர்ஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், உபதலை ஸ்ரீ சாய் நிவாஸ் டிரஸ்ட் ஆனந்த குரு ஸ்ரீ மேகநாத் சாய் சுவாமிகள் மற்றும் 'ஐ டு வி' அகாடமி நிறுவனர் சுந்தரமூர்த்தி ஆகியோர், கோப்பையுடன், முறையே, 60 ஆயிரத்து 100; 30 ஆயிரத்து, 100 மற்றும் 10 ஆயிரத்து, 100 ரூபாய் என, மூன்று அணிகளுக்கு ரொக்க பரிசை வழங்கினர்.
தவிர, சிறந்த கோல் கீப்பர், தடுப்பு ஆட்டக்காரர் மற்றும் தொடர் நாயகனுக்காக விருதும் வழங்கப்பட்டது. இதில், 19 ஊர் தலைவர் ராமா கவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆலா கவுடர் மற்றும் நீலகிரி கால்பந்து சங்க செயலாளர் மோகன் முரளி உட்பட, கால்பந்து ரசிகர்கள் பலர் பங்கேற்றனர்.

