/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
/
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
நீலகிரி வரையாடுகளுக்கு ரேடியோ காலர் வேண்டாம்? அடுத்தடுத்து இறப்பதால் ஆய்வு அவசியம்
ADDED : அக் 12, 2025 10:14 PM

கூடலுார்: ' முக்கூர்த்தி தேசிய பூங்காவில், 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்ட, 3 வரையாடுகள் அடுத்தடுத்து இறந்த நிலையில், அதனை மீண்டும் பொருத்தாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நம் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளை அழிவிலிருந்து பாதுகாக்க மாநில அரசு, 2022ம் ஆண்டு நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கி, அதனை ஐந்து ஆண்டுகள் செயல்படுத்த, 25.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
அந்த திட்டம் மூலம், ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, 'ரேடியோ காலர்' பொருத்தி கண்காணித்தல், வாழ்விடங்களை பாதுகாத்தல், நோய் கண்டறிந்து, சிகிச்சை அளித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
'ரேடியோ காலர்' திட்டம்
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நீலகிரி மாவட்டம் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், ஆண் வரையாடுக்கு, தனியார் அமைப்பு சார்பில் ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்தனர். ஜூலை மாதம், மாமிச உண்ணி தாக்கி அந்த ஆடு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.தொடர்ந்து, டிச., 6ம் தேதி, மேலும், இரண்டு வரையாடுகளுக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தினர். அப்போது பெண் வரையாடு மயக்கம் தெளியாமல் உயிரிழந்தது. அதன் வயிற்றில் மூன்று மாத குட்டியும் இருந்தது. 'உள் உறுப்புகள் பலவீனமடைந்து, இறந்தது,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
இறந்த மூன்றாம் வரையாடு
ரேடியோ காலர் பொருத்தப்பட்ட மற்றொரு ஆண் வரையாட்டின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த, 10ம் தேதி இணையதளம் வழியாக கண்காணித்த போது, வரையாடு நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
வனத்துறை ஆய்வின்போது, 'ரேடியோ காலர் பொருத்தப்பட்ட வரையாடு, புலியால் தாக்கப்பட்டு, இறந்ததாகவும், அதன் கழுத்தில் பொருத்தப்பட்ட ரேடியோ காலர் கருவி கண்டு எடுக்கப்பட்டது,' எனவும், வனத்துறையினர் தெரிவித்தனர்.
ரேடியோ காலர் பொருத்தப்பட்ட மூன்று வரையாடுகளும், உயிரிழந்த நிலையில், ஆய்வுக்காக வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்துவது குறித்து, அரசு மறு ஆய்வு செய்ய, வன உயிரின ஆர்வலர்கள்; கால்நடை டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு நடவடிக்கை அவசியம்
கூடலுார் பிரகதி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரான கால்நடை டாக்டர் சுகுமாரன் கூறுகையில், ''நீலகிரி வரையாடுகள் பயந்த சுபாவம் கொண்டவை. இவைகளுக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டாலும் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. இதனால், ரேடியோ காலர் பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், ஜூன் முதல் ஆக., வரை இனப்பெருக்க காலமாகும். டிச., ஜன., மாதங்கள் பிரசவ காலமாகும்.
எனவே, ஆராய்ச்சி என்ற பெயரில், ரேடியோ காலர் பொருத்தி அவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அவைகளின் வாழ்விட பகுதிகளை பாதுகாக்கவும், வேட்டை தடுப்பு முகாம் அமைத்து, அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை வேண்டும்,'' என்றார்.
முக்கூர்த்தி ரேஞ்சர் யுவராஜ் கூறுகையில்,'' முக்கூர்த்தியில் வரையாடுகள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. சமீபத்தில் அங்கு இறந்த கிடந்த வரையாடு புலி தாக்கி இறந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.