ADDED : செப் 25, 2026 06:11 PM
கூடலுார்: கூடலுார், கோழிக்கோடு சாலையில் மழைநீர் வழிந்தோடி சாலை சேதமடைவதால் ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. அதில், நந்தட்டி முதல் கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் சேதமடைந்து வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லை.
ஓட்டுனர்கள் கூறுகையில், ‘இச்சாலை, மூன்று மாநில போக்குவரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இச்சாலையில், உள்ளூர் மற்றும் வெளி மாநில வாகனங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. எனவே, இந்த சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் பிரகாஷ் கூறுகையில்,‘‘சேதமடைந்த பகுதி ஏற்கனவே சீரமைக்கப்பட்டது. மழையால் சேதமடைந்த பகுதிகள் விரைவில் சீரமைக்கப்படும்,’’ என்றார்.
