/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோதனை சாவடிகளில் கண்காணிப்பை மீறி வரும் போதை பொருட்கள்! சரக்கு வாகனங்கள்; பிற மாநில அரசு பஸ்களில் அதிகம்
/
சோதனை சாவடிகளில் கண்காணிப்பை மீறி வரும் போதை பொருட்கள்! சரக்கு வாகனங்கள்; பிற மாநில அரசு பஸ்களில் அதிகம்
சோதனை சாவடிகளில் கண்காணிப்பை மீறி வரும் போதை பொருட்கள்! சரக்கு வாகனங்கள்; பிற மாநில அரசு பஸ்களில் அதிகம்
சோதனை சாவடிகளில் கண்காணிப்பை மீறி வரும் போதை பொருட்கள்! சரக்கு வாகனங்கள்; பிற மாநில அரசு பஸ்களில் அதிகம்
ADDED : பிப் 21, 2025 04:44 AM

பந்தலுார்: 'நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை மீறி கொண்டு வரப்படும் போதை பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில், நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால், மாவட்ட எல்லை பகுதியில், பல சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், கர்நாடக எல்லையான கக்கனல்லா; கேரளா எல்லை பகுதிகளான நாடுகாணி; சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல், பூலகுண்டு, மணல்வயல், மதுவந்தால், கோட்டூர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு போலீசார், வனத்துறையினர் மற்றும் இ--பாஸ் சோதனை செய்யும் பணியாளர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறு மாதங்களில் 103 வழக்கு
அதில், பல சோதனை சாவடிகளில், வார இறுதி நாட்களில் வாகனங்கள் அதிகம் வரும் போது, போதிய சோதனைகள் செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால், வாகனங்கள், எளிதாக, தமிழக எல்லைக்குள் வந்து செல்கின்றன. இதனை பயன்படுத்தி போதை பொருட்கள் சில வாகனங்களில் கடத்தப்படுகின்றன.
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, முக்கிய சோதனை சாவடிகளில் கடந்த, 6 மாதங்களில் போதை மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததாக, கூடலுார் மற்றும் தேவாலா காவல் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில்,103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு பஸ்களில் கடத்தல்
அதில், கடந்த, 3ம் தேதி கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்தவிருந்த, 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 600 கிராம் எம்.டி.எம்.ஏ., போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, கேரளா பாண்டிக்காடு பகுதியை சேர்ந்த முகமது சபீர்,32, என்பவர் கைது செய்யப்பட்டார்.
10ம் தேதி கேரளா அரசு பஸ்சில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புகையிலை பொருட்கள் கடத்திய, கூடலுார் பாடந்துரையை சேர்ந்த அப்துல்லா,30,என்பவர் தொரப்பள்ளி சோதனை சாவடியில் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மேலும்,சில நாட்களுக்கு முன்பு, கர்நாடகா பஸ்சில், புகையிலை பொருட்கள் கொண்டு வந்த, 6 பேர் எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், 'மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், இரவு; அதிகாலையில் வரும் கேரள; கர்நாடக பஸ்கள் உட்பட பிற வாகனங்களை, முழுமையாக பரிசோதனை செய்யப்படுவது குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், காய்கறி; பழங்கள் கொண்டுவரும் சரக்கு வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். போலீசாரின் பணிசுமையை கருத்தில் கொண்டு, சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வேண்டும்,' என்றனர்.
தேவாலா டி.எஸ்.பி., ஜெயபால் கூறுகையில்,''சோதனை சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு நடக்கிறது. போதை பொருட்களும் பிடிக்கப்படுகிறது.
வரும் நாட்களில் அரசு பஸ்கள், சரக்கு வாகனங்களிலும் தீவிர சோதனை பணி நடத்த உத்தரவிடப்படும்,'' என்றார்.