/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிகழ்ச்சிகளில் 'பிளாஸ்டிக்' டம்ளர்களுக்கு மாற்றாக மண் குடுவை! மக்களிடையே பிரபலப்படுத்தினால் எல்லாம் மாறும்
/
நிகழ்ச்சிகளில் 'பிளாஸ்டிக்' டம்ளர்களுக்கு மாற்றாக மண் குடுவை! மக்களிடையே பிரபலப்படுத்தினால் எல்லாம் மாறும்
நிகழ்ச்சிகளில் 'பிளாஸ்டிக்' டம்ளர்களுக்கு மாற்றாக மண் குடுவை! மக்களிடையே பிரபலப்படுத்தினால் எல்லாம் மாறும்
நிகழ்ச்சிகளில் 'பிளாஸ்டிக்' டம்ளர்களுக்கு மாற்றாக மண் குடுவை! மக்களிடையே பிரபலப்படுத்தினால் எல்லாம் மாறும்
ADDED : செப் 04, 2024 11:17 PM

பந்தலுார் : பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், 'பிளாஸ்டிக்' பயன்பாட்டை குறைக்கும் வகையில், மண்ணால் உருவாக்கப்பட்ட குடுவை பயன்பாட்டை பொது நிகழ்ச்சிகளில் தன்னார்வலர்கள் அதிகரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த, 24 ஆண்டுகளாக மறுசுழற்சி செய்ய முடியாத 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு தடை உள்ளது. கடந்த, இரு ஆண்டுகளாக, ஐகோர்ட் உத்தரவின் பேரில், ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், அவர்கள் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, அதற்கு பதிலாக துணிபை கொடுக்கும் பணி நடந்து வருகிறது.
வனத்தில் வீசப்படும் 'பிளாஸ்டிக்'
எனினும், சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருட்களை, சாலை ஓரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வீசி வருவதால், மண்ணின் இயற்கை தன்மை மாறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், உணவுடன் வீசப்படும் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்ளும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது.
மேலும், பொது வெளியில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், மழை காலங்களில் அருகில் உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும் நீராதாரம் நிறைந்த பகுதிகளில் குவிந்து, நிலத்தடி நீரை தேக்கி வைக்க முடியாத நிலையை உருவாக்கி வருவதுடன், பல்வேறு நோய்கள் ஏற்படவும் காரணமாக மாறி வருகிறது.
பொது இடங்கள் மற்றும் திருமண நிகழ்வுகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் மெழுகு கலவை பூசப்பட்ட பேப்பர் டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
பொது நிகழ்ச்சிகளில் அதிகம்
இந்நிலையில், மாவட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது பிளாஸ்டிக் பொருட்களை, சில கடைகளில் இருந்து பறிமுதல் செய்த போதும், இவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எல்லையோர டாஸ்மாக் மதுபான கடைகளை ஒட்டிய, பிற கடைகளில் தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர்கள் விற்பனை தற்போதும் நடந்து வருகிறது. சில பொது நிகழ்ச்சிகளில் இவை பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு மக்களிடையே புழக்கத்தில் உள்ள 'பிளாஸ்டிக்' பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பந்தலுாரில், 'சேவ் நீலகிரி அறக்கட்டளை' என்ற அமைப்பு சார்பில், கோவில் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மண் குடுவை மற்றும் டம்ளர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
கோவில் விழாக்களில் விழிப்புணர்வு
இந்த அமைப்பினர், கோவில் விழாக்களில் உணவு வழங்கி வரும் நிலையில், பொது மக்களிடம் இந்த பொருட்களை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பொது நிகழ்ச்சிகளுக்கு இவற்றை வாங்க தயாராக உள்ளவர்களுக்கு, மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கியும் கொடுக்கின்றனர்.
அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், 'நீலகிரி மாவட்ட நிர்வாகம் அரசின் பொது நிகழ்ச்சிகளில், இதுபோன்ற மண்பாண்ட பொருட்களை கட்டாயமாக பயன்படுத்த ஊக்குவித்தால், மக்கள் மத்தியிலும் இதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கட்டுக்குள் கொண்டுவர முடியும்,' என்றனர்.