ADDED : செப் 23, 2026 07:02 PM
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, ஒரே ரேசன் கடையை, 6வது முறையாக காட்டு யானை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடலுார் தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் அருகே, தனியார் எஸ்டேட் கட்டடத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம், 21 ஆம் தேதி, அதிகாலை அப்பகுதியில் நுழைந்த காட்டு யானை ரேஷன் கடை சட்டரை உடைத்து அரிசி கோதுமை மூட்டைகளை வெளியே இழுத்து சேதப்படுத்தி சென்றது.
இந்நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு அப்பகுதி நுழைந்த காட்டு யானை, அதே ரேஷன் கடை சட்டரை உடைத்து, ரேஷன் பொருட்களை எடுக்க முயன்றது. தகவல் அறிந்து வந்த வனக்குழுவினர், யானையை விரட்டி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அச்சமடைந்துள்ள தொழிலாளர்கள் கூறுகையில்,‘இந்த ரேஷன் கடையை காட்டு யானை சேதப்படுத்துவது, 6வது முறையாகும். மீண்டும் சேதப்படுத்தும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, ரேஷன் கடையை சுற்றி சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
