/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் குறித்து எச்சரிக்கை செயலி: அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
/
யானைகள் குறித்து எச்சரிக்கை செயலி: அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
யானைகள் குறித்து எச்சரிக்கை செயலி: அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
யானைகள் குறித்து எச்சரிக்கை செயலி: அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்
ADDED : அக் 29, 2025 11:36 PM

கூடலூர்: கூடலூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள், காட்டு யானைகள் வருகை குறித்து எச்சரிக்கை செய்யும் செயலியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் புளியாம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ரோபோடிக் குறித்து அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற மாணவர்கள், பல்வேறு புதிய செயலிகளை உருவாக்கி வருகின்றனர்.
அதன்படி, 7ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் பாத்திமா மின்ஹா, கீர்த்திகா ஆகியோர் செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம், காட்டு யானைகளை கண்காணித்து, அது குறித்த தகவலை அப்பகுதி மக்களின் மொபைலுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, எச்சரிக்கை செய்யும் செயலியை உருவாக்கி அசத்தியுள்ளனர்.
மாணவிகள் கூறுகையில், 'காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை, மக்கள் அறிந்து கொள்ளவும், ஆக்ரோஷமாக காட்டு யானைகள் வந்தால், ஒலி ஏற்படுத்தி விரட்டும் வகையில், யானை எச்சரிக்கை அமைப்பு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
'இதனை செயற்கை நுண்ணறிவு கேமராவில் இணைப்பதன் மூலம், யானை வருகை குறித்து மொபைல் போனுக்கு தகவல் அனுப்பவும், ஆக்ரோஷமாக காட்டு யானை வந்தால், ஒலி ஏற்படுத்தி விரட்டும் வகையில், இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இவை, காட்டு யானைகள் பிரச்னை உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் கூறுகையில், 'மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள எங்கள் பள்ளியில், தனியார் பங்களிப்புடன் ரோபோடிக்ஸ் ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு ரோபோடிக் குறித்து அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
'பயிற்சி பெற்ற மாணவர்கள் மக்களுக்கு பயன்பெறக்கூடிய செயலிகளை உருவாக்கியுள்ளனர். அதில் யானை எச்சரிக்கை அமைப்பு குறித்த செயலி இப்பகுதிக்கு பயனுள்ளதாக இருக்கும். இதைத் தொடர்ந்து புதிய செயலிகளை உருவாக்க பயிற்சி அளித்து வருகிறோம்' என்றார்.

