/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் வேலியை கடக்க முடியாமல் தவிக்கும் யானைகள்; அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தால் யானை- மனித மோதல் அதிகரிப்பு
/
மின் வேலியை கடக்க முடியாமல் தவிக்கும் யானைகள்; அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தால் யானை- மனித மோதல் அதிகரிப்பு
மின் வேலியை கடக்க முடியாமல் தவிக்கும் யானைகள்; அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தால் யானை- மனித மோதல் அதிகரிப்பு
மின் வேலியை கடக்க முடியாமல் தவிக்கும் யானைகள்; அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தால் யானை- மனித மோதல் அதிகரிப்பு
ADDED : ஜூன் 27, 2025 12:10 AM

பந்தலுார்; கூடலுார் வனக்கோட்டத்தில், யானை வழித்தடங்களில் உள்ள சோலார் மின் வேலிகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தால், யானை- மனித மோதல் அதிகரித்து, மக்கள் போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டம், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள், முதுமலை, முத்தங்கா, நிலம்பூர், பந்திப்பூர், வயநாடு பகுதிகளுக்கு சென்று வரும் வழித்தடங்கள் இப்பகுதியில் உள்ளன.
'இங்குள்ள காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில், எந்த ஒரு நபரும் தங்களின் தோட்டங்களில், சோலார் மின் வேலி அமைக்க கூடாது,' என்ற வனத்துறை உத்தரவு உள்ளது.
இந்நிலையில், கூடலுார், பந்தலுார் பகுதிகளில், கோர்ட் மற்றும் வனத்துறை உத்தரவுகள் காற்றில் பறக்க விட்டு, வனப்பகுதியை ஒட்டிய தனியார் தோட்டங்கள் மற்றும் ஓய்வுவிடுதிகள் மற்றும் வனத்துறை மற்றும் வருவாய்துறை கண்காணிப்பில் உள்ள 'செக்சன்-17' பிரிவு நிலப்பகுதிகளில் சோலார் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், யானைகளின் வழித்தடங்கள் தடைபட்டு, அவைகள் கிராமங்களுக்குள் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. நாளடைவில் கிராமப்பாதைகளில் செல்வதை அவைகள் வழக்கமாக்கி கொள்கின்றன.
இந்த சூழ்நிலையில் யானைகள் செல்லும் வழியில் மக்கள் வரும் போது, யானை- மனித மோதல் ஏற்பட்டு பலிகள் தொடர்கின்றன. மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சோலார் வேலிகளை அகற்ற வனத்துறையினர், 'நோட்டீஸ்' வழங்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில அரசியல் கட்சியினரின் நிர்பந்தம் காரணமாக, இழுபறி ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் சோலார் மின் வேலிகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், 'யானை- மனித மோதலுக்கு தீர்வு காண, தோட்டங்கள்; விடுதிகளில் உள்ள மின் வேலிகளை அகற்ற வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலுர் வன அலுவலர் வெங்டேஷ் பிரபு கூறுகையில், ''ஏற்னகவே, வேலியை அகற்ற வலியுறுத்தி, பல தோட்ட நிறுவனங்களுக்கு , 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து, விரைவில் மின் வேலிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.