ADDED : பிப் 07, 2024 11:15 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே கல்லார் காட்டாற்றில் தனி நபர்கள் அத்து மீறி பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆழப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே கல்லாரில் நூற்றுக்கணக்கான பாக்கு தோப்புகள் உள்ளன. இங்குள்ள பாக்கு மரங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக கல்லார் காட்டாறு உள்ளது. தற்போது கோடை காலம் நெருங்க உள்ள நிலையில் கல்லார் கட்டாறில் நீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இந்த ஆறு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.ஆற்றில் கற்கள் அதிகம் காணப்படும். மணல் பரப்பு மிகவும் குறைவு. இதனால் தண்ணீர் பெரும்பாலும் தேங்கி நிற்காது.
இந்நிலையில் நீர்வரத்து குறைவால், தண்ணீரை தேக்கும் முயற்சியாக பொக்லைன் இயந்திரம் வாயிலாக தனி நபர்கள் ஆற்றுக்குள் ஆழப்படுத்தும் பணியினை செய்து வருகின்றனர். வனவிலங்குகள் அதிகம் தண்ணீர் அருந்தும் பகுதியாகவும் இந்த ஆறு உள்ளது. இதனிடையே பொது பணித்துறை அனுமதியின்றி இவ்வாறு செய்வதால் ஆற்றின் நீர் போக்கு மாறும் நிலை உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
அரசு துறை அதிகாரிகள் இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-----

