/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுவர் எழுப்பி நடைபாதை ஆக்கிரமிப்பு
/
சுவர் எழுப்பி நடைபாதை ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 08, 2025 08:33 PM

பந்தலுார்; 'பந்தலுார் எருமாடு அருகே ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள நடைபாதையை மீட்டு தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் கொல்லன் வயல் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு பணியர் மற்றும் காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் மற்றும் பிற சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்ல, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ஒருவர் தனது பட்டா நிலத்திலிருந்து இடம் கொடுத்துள்ளார். அப்பகுதி மண் சாலையாக இருந்ததால் மக்கள் பயன் படுத்த முடியாத நிலையில், புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால்,மக்கள் வேறு வழியாக சுற்றி வருகின்றனர். தற்போது, இந்த சாலையை சீரமைத்து தர எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், 'சாலையில் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து செய்து, பாதுகாப்பு சுவர் கட்டி உள்ளதாகவும், அதனை அகற்றி நடைபாதையை மீட்டு தர வேண்டும்,' என, வலியுறுத்தி அப்பகுதி மக்கள், ஆர்.டி.ஓ., விடம் புகார் மனு அளித்தனர்.
ஆர்.டி.ஓ. உத்தரவை தொடர்ந்து, பந்தலுார் தாசில்தார் சிராஜுநிஷா தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் நில அளவை துறையினர் நடைபாதையை நிலஅளவை செய்தனர். அப்போது, 'நடைபாதை ஆக்கிரமித்து பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது; அதனை அகற்ற வேண்டும்,' என, சம்பந்தப்பட்ட இட உரிமையாளரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
நில உரிமையாளர் ஜான் கூறுகையில், ''கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் முறையாக நில அளவை செய்து நான் வாங்கிய பட்டா நிலத்தை, வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்து சப்-டிவிஷன் செய்து கொடுத்துள்ளனர். தற்போது, எனது பட்டா நிலத்தில் நடைபாதை அமைந்துள்ளதாக கூறுவது தவறு. அதிகாரிகள் எனது பட்டா நிலத்தின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க முற்பட்டால், நீதிமன்றம் மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்வேன்,'' என்றார்.
தாசில்தார் சிராஜுநிஷா கூறுகையில்,'' குறிப்பிட்ட இடம் ஆக்கிரமிப்பு என்பது தெரிய வந்துள்ளது. சம்பந்தபட்ட நபருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.