/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
/
பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : அக் 21, 2024 04:42 AM
கோத்தகிரி : கோத்தகிரி அருகே தனியார் பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு நடந்தது. பள்ளி முதல்வர் அமுதா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தற்போது, உலகெங்கும் மிகப்பரவலாக விவாதிக்கப்படுகிற பொருள் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் என்பதாகும்.
கடந்த, 150 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை, 1.41 டிகிரி வரை உயர்ந்துள்ள நிலையில், 2028 க்குள் பூமியின் வெப்பநிலை, 1.5 டிகிரியை தாண்டும் என்ன அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை முழுமையாக நம்மால் உணர முடியும். புவி வெப்பத்திற்கு காரணமான, கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்றவற்றின் அளவு பூமியின் தாங்கும் திறனை விட மிக அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
இனி அதீத காலநிலைதான் இனிமேல் நிலவும். 'அதிக புயல்கள், தொடர் மழை, வெப்ப அலைகள், வறட்சி,' என, காலநிலை மாற்றத்தின் தாக்கம், மனித சமுதாயம் மட்டுமல்லாமல், ஏனைய உயிரினங்களையும் மிரட்டுகிறது.
புவி வெப்பம் அதிகரிக்கும் போது, கொசு மற்றும் வைரஸ்களின் எண்ணிக்கை பெருகும். அப்போது டெங்கு போன்ற பல தொற்று நோய்கள் பரவும்.
அண்மையில் தோன்றி பூமியை சீரழித்த கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. பனி மலைகள் உருகும் போது கடல் மட்டம் உயரும். இதனால், கடற்கரையோர நகரங்கள் பெரும் அழிவை சந்திக்கும். பனிமலை உருகும் போது, வைரஸ்கள் சமவெளி பகுதிக்கு வந்து பேரழிவை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மனித குலத்திற்கு இயற்கை இல்லாமல் வாழ்வில்லை.
பூமியை தனது ஆறாவது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒவ்வொரு நாளும், 372 உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. பூமியை காக்க ஒவ்வொருவரும் நுகர்வு கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு, தேவைக்கு அளவான பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, மரம் நடவு செய்யப்பட்டது.