போலி 'லே -அவுட்கள்!' தமிழக வணிக ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார்: விதிமீறிய புரமோட்டர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
போலி 'லே -அவுட்கள்!' தமிழக வணிக ஒழுங்குமுறை ஆணையத்திடம் புகார்: விதிமீறிய புரமோட்டர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
UPDATED : செப் 08, 2026 05:13 PM
ADDED : செப் 08, 2026 05:11 PM

குன்னுார்: 'நீலகிரியில் அதிகரிக்கும் போலி 'லே--அவுட்கள்' மீது, மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அதில், வீட்டுமனை திட்டம், ரியல் எஸ்டேட் போன்றவை ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற வெளி மாநிலத்தவர்களால் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் அனுமதியற்ற வீட்டு மனை திட்டங்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்து கண்டறிய, மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, குன்னுார்- சப் கலெக்டர், மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர், கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு தீவிர கள ஆய்வு நடத்தியதில், 'கோகலாடா புதுமந்து எஸ்டேட்ஸ் ஐவி இன்பரா அண்ட் டெவலப்பர்ஸ், கோடநாட்டில் டெர்ரா பை கன்ட்ரிசைடு லேண்ட், ஊட்டி தொட்டபெட்டாவில் ரூமி அன்வர் வரதராஜ் எஸ்டேட், ஐக்கனாரையில் அமாயா ஹெவன்லி வேலி - வெஸ்டர்ன், ஸ்ரீ வேதிக் வனம் ஹெரிடேஜ், தி ராயல் நீலகிரீஸ், முள்ளிகூரில் ஜே.கே. புராஜெக்ட்ஸ், பர்லியாரில் அலமேலு சீனிவாச வென்ச்சர், ஜெகதளாவில் வித்ராக் குரூப், நடுஹட்டி கேலக்ஸி வேலி,' உள்ளிட்ட, 17 அனுமதியற்ற 'லே- அவுட்கள்' சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, அவற்றுக்கு பணிநிறுத்த அறிவிப்புகள் வழங்கப்பட்டன. இதில், மனை பெயர் குறிப்பிடாத தனி நபர்களும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளன.
இத்தகவல்கள் அருண் பெல்லி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய மனுவுக்கு, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் அளித்த பதிலில் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மனை வணிக ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பணீந்திர ரெட்டிக்கு, மனு அனுப்பிய நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் (அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர்) சுர்ஜித் சவுத்ரி கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், எந்தவொரு மனை பிரிவும், மனை வணிக ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் விளம்பரப்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என, மனை வணிக ஒழுங்குமுறை சட்டம் தெரிவிக்கிறது.
எனினும் பல புரோமோட்டர்கள் அனுமதி பெறாமல், சமூக வலைதளங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் 'வாட்ஸ்-அப்' குழுக்களில் போலியாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி மனைகளை விற்பனை செய்துள்ளனர்.
அதில், குன்னுர் இளித்தொரை, எடப்பள்ளி உள்ளிட்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களை அழித்தும், ரசாயனங்களை பயன்படுத்தி பாறைகளை தகர்த்தும் சட்டவிரோதமாக பல கி.மீ., துாரத்துக்கு சாலைகள் அமைத்துள்ளனர். மலைப்பகுதி கட்டட விதிகள் நகர் ஊரமைப்பு சட்டம் மற்றும் ஊராட்சிகள் சட்டங்களை அப்பட்டமாக புறக்கணித்து பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மனை வணிக ஒழுங்குமுறை விதிகளை மீறிய, குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக, 10 சதவீதம் அபராதமும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்க வேண்டும். அத்துடன், இவர்களிடம் ஏமாந்து மனைகளை வாங்கிய அப்பாவி மக்களின் பணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட புரோமோட்டர்களிடமிருந்து முழுமையாக திரும்ப பெற்றுதர, மனை வணிக ஒழுங்குமுறை ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
