/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
/
கோத்தகிரி பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
கோத்தகிரி பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
கோத்தகிரி பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ADDED : நவ 26, 2025 07:44 AM
கோத்தகிரி: கோத்தகிரி பகுதி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி வட்டாரத்தில், 2025 ராபி பருவத்தில் (அக்.,முதல்), உருளை கிழங்கு, முட்டைக்கோஸ், காரட் மற்றும் வெள்ளைப்பூண்டு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தோட்டக்கலைத் துறையின் வாயிலாக, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட நிறுவனம் மூலம் நடப்பு பருவத்தில் செயல் படுத்தப்பட உள்ளது.
எதிர்பாராத விதத்தில் காலநிலை மாற்றம் காரணமாக, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகள் காரணமாக, உண்டாகும் பயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு தனிப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் பயிர் செய்துள்ள பயிருக்கு பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும்.
அதன்படி, உருளைக்கிழங்கு பயிருக்கு, பிப்., 15ம் தேதிக்குள் ஏக்கருக்கு, 5,328 ரூபாய்; முட்டைக்கோஸ் பயிருக்கு, ஜன., 31ம் தேதிக்குள் 1,375 ரூபாய்; கேரட் பயிருக்கு,பிப்., 28ம் தேதிக்குள், 3,945 ரூபாய்; வெள்ளைப் பூண்டு பயிருக்கு, 2026, பிப்., 28ம் தேதிக்குள், 3,710 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இந்த பிரிமியம் தொகையை, தங்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அருகில் உள்ள சேவை மையங்களில் விவசாயிகள் செலுத்தலாம்.
விவசாயிகள், தங்களது புகைப்படம், சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் அட்டை ஆவணங்களை சமர்ப்பித்து, பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீடு செய்து கொண்ட விவசாயிகள், பாதிப்பு நடந்த, 72 மணி நேரத்திற்குள் காப்பீடு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, தங்கள் பகுதி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
கோத்தகிரி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம், இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

