/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால்... விவசாயிகள் மகிழ்ச்சி!; காய்கறிக்கு சீரான விலை கிடைப்பதால் பணியில் ஆர்வம்
/
நீலகிரியில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால்... விவசாயிகள் மகிழ்ச்சி!; காய்கறிக்கு சீரான விலை கிடைப்பதால் பணியில் ஆர்வம்
நீலகிரியில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால்... விவசாயிகள் மகிழ்ச்சி!; காய்கறிக்கு சீரான விலை கிடைப்பதால் பணியில் ஆர்வம்
நீலகிரியில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால்... விவசாயிகள் மகிழ்ச்சி!; காய்கறிக்கு சீரான விலை கிடைப்பதால் பணியில் ஆர்வம்
ADDED : மார் 23, 2025 10:27 PM

ஊட்டி: நீலகிரியில் பரவலாக பெய்து வரும் மழையால் மலை காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், தோட்டங்களை பராமரிப்பு பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடித்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் தோட்டங்களுக்கு இடையே பல ஏக்கரில் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், முட்டை கோஸ், முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, வெள்ளை பூண்டு, மேரக்காய் ஆகியவை உற்பத்தி செய்தாலும், குறிப்பாக உருளைகிழங்கு, கேரட் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு, கோடை மழையின் ஆண்டு சராசரி அளவு, 30 செ.மீ., ஆகும். நடப்பாண்டில் சராசரியாக, 20 முதல் 25 செ.மீ., மழை பெய்தால் தேயிலை, மலை காய்கறி தோட்டங்களுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கிடைத்துவிடும். தோட்டங்களிலும் எதிர்பார்த்த அளவு மகசூல் பெற முடிகிறது.
நடப்பாண்டில் விதைப்பு பணி மேற்கொண்ட விவசாயிகள், மழை தாமதமானதால், தோட்டங்களுக்கு 'ஸ்பிரிங்ளர் உதவியுடன் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்தது. இதுவரை, மாவட்டத்தில், 12.5 செ.மீ., மழை பெய்துள்ளது. பல ஏக்கரில் விதைப்பு பணி, நாற்று முளைத்துள்ள மலை காய்கறி தோட்டங்களுக்கு நல்ல ஈரப்பதம் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உற்பத்தி அதிகரிப்பு
மேலும், நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்து, அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. கேரட், உருளை கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறிகளுக்கு விலை குறையாமல் உள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை. மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில், நீலகிரி காய்கறிகளுக்கு மவுசு அதிகமாகவே உள்ளது.
மேலும், தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதில், அவர்களை இயற்கை விவசாயம் செய்யவும் ஊக்குவிப்பு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது நீலகிரியில் மலை காய்கறி பரப்பளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அரசு கொள்முதல் மையம் தேவை
விவசாய சங்க பிரதிநிதி ராமன் கூறுகையில், '' நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகளை பெரும்பாலும் இடைத்தரகர்கள் வாங்கி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால், அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. அதேசமயம், அதிகளவு மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் இடங்களான, கேத்தி பாலாடா, முத்தோரை, பாலாடா, தேனாடுகம்பை, பட்பயர் போன்ற பகுதிகளில் அரசு கொள்முதல் மையங்கள் அமைத்து, நேரடியாக விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி அதனை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதன் மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். அதே சமயம், விவசாயிகளுக்கு தேவையான மலை காய்கறி கிடைக்கும்,'' என்றார்.
தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், '' மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையும் வகையில் கிராமங்கள் தோறும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயம் முக்கியம் என்பதால், இம்முறை, 1,331 விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.'' என்றார்.