விவசாயிகளுக்கு பயன்படாத குளிர் பதன கிடங்கு: நவீன மயமாக்க அரசுக்கு கோரிக்கை
விவசாயிகளுக்கு பயன்படாத குளிர் பதன கிடங்கு: நவீன மயமாக்க அரசுக்கு கோரிக்கை
UPDATED : ஜூன் 02, 2026 11:00 PM
ADDED : ஜூன் 02, 2026 10:33 PM

ஊட்டி: ஊட்டி ரோஸ் கார்டனில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் கீழ், குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியின் போது, காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணாவதை தவிர்க்கவும், இந்த குளிர் பதன கிடங்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பதன கிடங்கு, 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாகும். மலை காய்கறிகளான, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மலை காய்கறிகள் கிடங்கில் வைக்கும் வகையில் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 50 லட்சம் ரூபாய் செலவில் இந்த குளிர்பதன கிடங்கு புனரமைக்கப்பட்டது.
அதில், விவசாயிகள், உருளைக்கிழங்கு விதை உள்ளிட்ட சிலவற்றை தவிர, வேறு காய்கறிகளை வைப்பதில்லை. பிற மலை காய்கறிகள் உற்பத்தி குறைந்துள்ளதால், அன்றாட சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால், அரசின் குளிர் பதன கிடங்கின் பயன்பாடு குறைந்துள்ளது.
ஆரிகவுடர் விவசாய சங்க பொதுச் செயலாளர் நடராஜன் கூறுகையில்,'' இந்த கிடங்கில் விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் நவீன வசதிகள் இல்லாததால், பல மாதங்களாக விவசாயிகள் பயன்படுத்துவது இல்லை. விவசாயிகளுக்கு உகந்தவாறு கட்டமைப்பு வசதிகளை தோட்டக்கலை துறையினர் மேம்படுத்தினால் மட்டுமே விவசாயிகள் பயன் பெற முடியும். அரசுக்கு மனு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.
